Published : 28 Aug 2017 04:17 PM
Last Updated : 28 Aug 2017 04:17 PM

இன்று மாலை கூடுகிறது உரிமைக்குழு: தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் புறக்கணிப்பால் அதிமுக பலம் குறைந்தது

தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்களை சட்டபேரவைக்குள் கொண்டு வந்தது குறித்து திமுக உறுப்பினர்கள் பற்றி விசாரிக்க உரிமைக்குழு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் உறுப்பினராக இருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவர் கூட்டத்தைப் புறக்கணிப்பால் அதிமுக பலம் குறைந்தது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், அமைச்சர் மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

சட்டபேரவையில் பேச அனுமதி கேட்டபோது சபாநாயகர் அனுமதி மறுத்தார். சட்டபேரவைக்கு திமுகவினர் பான் மசாலா, குட்கா போதை வஸ்துக்களை எடுத்து வந்து தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினர்.

தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை சட்டபேரவைக்குள் எடுத்து வந்ததாக 20 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இன்று உரிமைக்குழு கூடுவதாக பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்திருந்தார். உரிமைக்குழுவில் மொத்தம் 17 பேர் உள்ளனர். இதில் அதிமுகவுக்கு 10 உறுப்பினர்கள், திமுகவுக்கு 6 உறுப்பினர்கள், காங்கிரசுக்கு ஒரு உறுப்பினர் என 17 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த குழுவுக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைவர் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் உறுப்பினராக இருக்கிறார். 10 அதிமுக உறுப்பினர்கள் , இவர்களில் தங்கத்துரை , ஏழுமலை , ஜக்கையன் உள்ளிட்ட 3 பேர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆவர்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு உரிமைக்குழு கூடுகிறது. தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 3 பேரும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். திமுக தரப்பில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் அனைவருக்கும் அழைப்பு அனுப்பபட்டுள்ளது என்று உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். ஆகவே தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏக்கள் தவிர அனைவரும் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

17 பேரில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் கலந்துகொள்ளாத பட்சத்தில் மொத்த எண்ணிக்கை 14 ஆக குறையும். இதில் அதிமுக 7 உறுப்பினர்கள் , திமுக கூட்டணி 7 உறுப்பினர்கள் என சரி சமமான எண்ணிக்கையில் இருப்பார்கள். இதனால் உரிமைக்குழு கூட்ட முடிவுகள் எடுப்பதில் குழப்பம் நீடிக்கவே வாய்ப்பு உள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே நாளை டெல்லி செல்ல உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைசெயலகத்தில் சபாநாயகருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் உரிமைக்குழு விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x