Last Updated : 09 Aug, 2017 09:37 AM

Published : 09 Aug 2017 09:37 AM
Last Updated : 09 Aug 2017 09:37 AM

கட்டவண்டி கட்டவண்டி.. காணாமல் போற வண்டி!

பழைய வின்டேஜ் கார்களுக்குக்கூட மெக்கானிக் கிடைத்துவிடுவார், ஆனால், கட்டை மாட்டுவண்டியைச் சரி செய்யும் தச்சர்கள் அருகிப்போய்விட்டார்கள். மதுரை, சிவகங்கை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வண்டிக்கு ஒன்று என்றால், உடனே மதுரை யா.கொடிக்குளம் நோக்கிப் படையெடுக்கிறார்கள், முருகேசனைப் பார்க்க. மாட்டுவண்டி எந்த நிலையில் இருந்தாலும் சரிசெய்து கொடுக்கும் கில்லாடியான வேலைக்காரர் முருகேசன். பந்தய வண்டிகளுக்கு ஸ்பெஷலிஸிட் இவர்.

வீட்டு வாசலில் நான்கு மாட்டு வண்டிகள் வரிசை பிடிக்கின்றன. அதில் இரண்டுக்குச் சக்கரங்களைக் காணோம். வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து புதிய சக்கரங்களைச் செய்து கொண்டிருக்கிறார் முருகேசன். அந்த வீட்டின் ஒரு மூலையில் வெவ்வேறு வண்ணம், வெவ்வேறு வடிவங்களில் மரக்கட்டைகள், வண்டியின் உதிரிப் பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன.

கட்டை வண்டிக்கு கனமான மரம்

முருகேசனின் கை சக்கரவேலையில் இருக்க.. வாய் மட்டும் நம்மிடம் பேசியது. “இதுக்கு மின்ன, தாத்தா வேலுவும், அப்பா மலைச்சாமியும் இந்த வேலையப் பார்த்தாங்க. நமக்கு படிப்பு ஏறல. அப்பாவுக்கு ஒத்தாசையா இருந்த என்கிட்ட, உள்ளூர்க்காரரான கே.எஸ்.ஏ.சுதாகர் அம்பலம், ‘இதை நீயே சரி பண்ணிக்குடுப்பா’ன்னு ஒரு தட்டு (பந்தய) வண்டியை ஒப்படைச்சார். அப்ப எனக்கு 17 வயசுதான். என்னைய நம்பி ஒப்படைச்ச முதல் வேலைங்கிறதால, அப்பாக்கிட்ட கேட்டுக் கேட்டுப் பக்குவமா சரி செஞ்சேன். வேலை திருப்தியா இருந்ததால, தவுடன் அம்பலம், ஜெயக்குமார்னு அடுத்தடுத்து நமக்கிட்ட ஆர்டர்கள் குவிஞ்சிருச்சு.

கட்டை மாட்டுவண்டிக்கு கனமான மரங்களைப் போடணும். ஆனா தட்டுவண்டி, பந்தயத்துக்கு போறதால அளவும் எடையும் கம்மியா இருக்கணும். கட்டை வண்டி 850 கிலோ வந்தா, தட்டு வண்டி 70 கிலோதான். சக்கரம் ரெண்டும் லேசா சுத்திவிட்டாலும் சத்தமே இல்லாம சும்மா காத்தாடி மாதிரி சுத்தணும். அதேநேரத்துல, மாடு தலைதெறிக்க ஓடுனாலும் சக்கரமோ வண்டியோ உடைஞ்சிறக் கூடாது” என்று அவர் சொல்லச் சொல்ல வியப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு மரம்

“மாட்டு வண்டி எந்த மரத்துல செய்யுறீங்க?” என்று கேட்டால், “எந்த வண்டி, எந்தப் பாகம்?” என்று திரும்பக் கேட்கிறார். உண்மைதான், ஒவ்வொரு பாகத்துக்கும் ஒவ்வொரு மரம் உகந்தது. பந்தய வண்டிக்கு, சக்கரத்தின் வெளிவட்டம் நாட்டுக்கருவை, 12 ஆரக்கால்களும் நாட்டு வாகை, நடுவில் அச்சையும் சக்கரத்தையும் இணைக்கிற குடைக்கட்டை புரசு மரம். நுகத்தடி மஞ்சநத்தி, வண்டியின் நீளமான பகுதியான ‘போல் மரம்’ கல்மூங்கில், உட்காரும் பகுதி தேக்கு, முன் சக்கை, பின் சக்கை வாகை மரம். அச்சு, அச்சாணி, சக்கரத்தைச் சுற்றி இருக்கிற பட்டை - இவை மட்டும் இரும்பு!

“சக்கரம் வட்டமா இருக்குதான்னு சரிபார்க்கக்கூட காம்பஸ் மாதிரி ஒரு கருவி இருக்கு. இருக்கிறதுலேயே ரொம்ப கஷ்டமான வேலை குடைக்கட்டை செய்யுறதுதான். பெரிய சொம்பு சைஸ்ல இருக்கிற கட்டையில், சுத்திச்சுத்தி 12 துளைகள் போடணும். அந்தத் துளைகளைப் பிரிக்கிற சுவர்களும் சரியா 12 இருக்கணும்.

எல்லா துளைகளுக்கும் சீரான இடைவெளி துல்லியமா இருக்கணும். இல்லைன்னா, ஆரக்கால்களே வேலை சரியில்லைன்னு காட்டிக் கொடுத்திடும்” என்ற முருகேசன், “கட்டை வண்டியோட போல் மரத்துக்கு 16 அடி நீள ஈன் (அயனி) மரத்தைப் பயன்படுத்துவோம். இரும்பு மாதிரி உறுதியான மரம் அது. இப்ப அந்த மரமே வர்றதில்ல. மரக்கடைக்காரவுகளே ஈன் மரம்னு சொன்னா மேலும் கீழும் பார்க்காக. இப்ப அதுக்குப் பதிலா கோங்கு மரத்தைத்தான் பயன்படுத்துறோம்” என்கிறார்.

50 ஆயிரத்துக்கு பார வண்டி

“பந்தய வண்டிக்கு என்ன வேலைங்கய்யா அடிக்கடி வரும்?” என்று கேட்டால், “தார் ரோட்ல ஓடுற வேகத்துல சக்கரத்துல இருக்கிற இரும்புப் பட்டை கடுமையா சூடாகும். சூட்டுல விரிஞ்சி கொடுக்கிறது தான இரும்போட குணம்? அதை வெட்டி நீளத்தைக் குறைச்சி மறுபடியும் போடுவோம். அது எங்களுக்குப் பஞ்சர் ஒட்டுற வேலை மாதிரி. பட்டை தேய்ஞ்சிருச்சின்னா, பைக்கிற்கு டயர் மாத்துற மாதிரி நாங்க பட்டையை மாத்திடுவோம்.

அதேமாதிரி, சக்கர வட்டம், ஆரக்கால்களும் அடிக்கடி சேதமடையும். அதுக்கான உதிரிப் பாகங்களை ஏற்கெனவே செஞ்சி தயாரா வெச்சிருப்பேன்” என்று விளக்கம் தருகிறார்.

“உங்களுக்குப் பிறகு?” என்று கேட்டால், “30 ஆயிரம் இருந்தா பந்தய வண்டி, 50 ஆயிரம் இருந்தா பார வண்டியே செஞ்சிடலாம். ஆனா, டிராக்டரும், குட்டி யானையும் வந்த பிறகு யாரு கட்டை வண்டி வாங்குறாங்க? என் பையனுக்கு இந்தத் தொழில்ல விருப்பம் இல்ல. வண்டிப் பந்தயம் இருக்கிறதால தான் என்னைய மாதிரி நாலஞ்சி பேருக்கு பொழப்பு ஓடுது. அதுவும் போச்சுன்னா மாட்டு வண்டியை சுத்தமா மறந்துட வேண்டியதுதான்” வேதனைச் சிரிப்பை உதிர்க்கிறார் முருகேசன்.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x