நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை - அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாதான்: தம்பிதுரை திட்டவட்டம்

நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை - அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாதான்: தம்பிதுரை திட்டவட்டம்
Updated on
1 min read

அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாதான். அவரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார். தற்போது கட்சியை தலைமை நிர்வாகிகள் கவனித்துக் கொள்கின்றனர் எனவும் அவர் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் நேற்று அளித்த பேட்டி:

கட்சியை காப்பாற்றுவதில்தான் அக்கறை காட்டுகிறார்களே தவிர மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து?

முதல்வர் கே.பழனிசாமியின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு அத்தனை உதவிகளையும் செய்து வருவதுடன், சட்டப்பேரவையில் பல்வேறு திட்டங்களையும் அறிவித்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை இந்த அரசு தொடர்ந்து செய்து வரு கிறது.

ஏரி,குளங்களை தூர்வாரும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாரே?

முதலில் அவர் கோயில் குளங்களைத்தான் தூர்வாரினார். அவருக்கு தற்போது ஆன்மீகத்தில் நம்பிக்கை வந்துவிட்டது. குளத்தை தூர் வாரினால் ஆட்சிக்கு வரலாம் என ஜோதிடர் கூறியதால்தான் அதை செய்கிறார்.

அதிமுக 3 அணிகளாக பிரிந்துள்ள நிலையில், கட்சியின் உண்மையான தலைமை யார்?

அதிமுகவில் 3 அணிகள் என்பது இல்லை. சில கருத்து வேறுபாடுகள் மட்டுமே உள்ளது. அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதால் தொடர்ந்து பேசி வருகிறோம். ஒவ்வொருவரும் அவர்களுடைய வழியில் கட்சி இணைய வேண்டும் என்பதற்காக செயல்பட்டு வருகின்றனர். கட்சியை காப்பாற்ற ஒன்றுபட்டு செயல்பட்டு வருகிறோம்.

தற்போது அதிமுகவில் தலைமையே இல்லையா?

தலைமை இருக்கிறது. ஆட்சியை முதல்வர் பழனிசாமியும், கட்சியை தலைமை நிர்வாகிகளும் கவனிக்கின்றனர். கட்சிப் பொதுச்செயலாளர் சசிகலாதான். அவர் எங்கிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். அணிகள் இணைப்புக்கு பொதுச்செயலாளர் இடையூறாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஒருவரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. எனவே ஒன்றுபட்டுதான் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளோம்.

தமிழகத்தை அதிமுக ஆளவில்லை; பாஜகதான் ஆள்வதாக கூறப்படு கிறதே?

உத்தர பிரதேசம், அரியாணா வில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்திய அரசையும் ஆள்கிறது. தமிழகத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைத்த அதிமுக அரசுதான் ஆள்கிறது.

இவ்வாறு தம்பிதுரை பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in