Published : 02 Aug 2017 09:40 AM
Last Updated : 02 Aug 2017 09:40 AM

அணிகள் இணைப்பு குறித்து ரகசிய பேச்சு: தினகரனை ஒதுக்கிவிட்டு அதிமுகவை கைப்பற்ற தீவிரம் - முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் 2 நாளில் முக்கிய முடிவு

தினகரனை கட்சிக்குள் வரவிடாமல் தடுத்து கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் அதிமுகவின் இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக ஓபிஎஸ் அணியுடன் முதல்வர் பழனிசாமி அணியினர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் தற்போது ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் 3 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான தினகரன், கடந்த ஜூன் 2-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். அவரை தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 35 எம்எல்ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தினகரனை விலக்கி வைப்பதாக அறிவித்த அமைச்சர்களையும் விமர்சித்தனர்.

ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமி அணிகள் இணைய 60 நாட்கள் கெடு விதிப்பதாகவும், அதற்குள் இணையாவிட்டால் ஆகஸ்ட் 5 முதல் தீவிர கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார். ஆனால், அணிகள் இணைப்புக்காக அமைக்கப்பட்ட குழுவை ஓபிஎஸ் கலைத்தார். ஆனால், பழனிசாமி தரப்பில் இணைப்பு முயற்சிகள் தொடர்வதாக கூறி வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி சென்றிருந்த முதல்வர் பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் நரேந்திர மோடியை தனித்தனியாக சந்தித்தனர். அப்போது இரு அணிகள் இணைப்பு தொடர்பாக விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், அணிகள் இணைப்புக்காக தினகரன் விதித்த 60 நாள் கெடு வரும் 4-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் இணையாவிட்டால் 5-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளை சந்திக்க தினகரன் முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் நேற்று முன்தினம் தகவல்கள் பரவின.

நிருபர்களிடம் தினகரன் நேற்று கூறும்போது, ‘‘இரு அணிகள் இணைப்புக்கான முயற்சி நடக்கவில்லை. துணை பொதுச்செயலாளராக என் பணியை தொடங்க உள்ளேன். மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்த உள்ளேன்’’ என்றார். தினகரனின் இந்த அறிவிப்பு முதல்வர் பழனிசாமி அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கட்சிக்குள் தினகரன் ஆதிக் கத்தை விரும்பாத அமைச்சர்கள், தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோ சித்தனர்.

அதே நேரத்தில் ஓபிஎஸ் அணியினரும் தீவிர ஆலோசனை நடத்தினர். தினகரன் அறிவிப்பு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை, அணிகள் இணைப்பு தொடர்பாக இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு தினகரன் ஆதரவாளர்களான தளவாய் சுந்தரம், தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ ஆகியோர் முதல்வரை சந்தித்துப் பேசினர். அவர்களும் தினகரன் அறிவிப்பு தொடர்பாக முதல்வரிடம் விவாதித்ததாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து நேற்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். அதில், தினகரனின் செயல்பாடு குறித்தும், அணிகள் இணைப்பு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. சசிகலா, தினகரன் குடும்பத்தை முழுமையாக ஒதுக்கிவிட்டு, கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் தீவிரம் காட்டி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, முதல்வர் பழனிசாமி அணியினர் ஓபிஎஸ் அணியுடன் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மூத்த அமைச்சர்கள் சிலர், ஓபிஎஸ்ஸுடன் பேசியதாக கூறப்பட்டது. அணிகள் இணைப்பு விவகாரத்தில் பாஜகவும் சில ஆலோசனைகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளித்த அதிமுக அணிகளுக்கு கைமாறாக மத்திய அமைச்சரவையில் இடமளிக்கவும் பாஜக முடிவு செய்துள்ளது. அதிமுகவின் இரு அணிகளிலும் சேர்த்து 3 அல்லது 4 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

பிஹாரைப்போல்...

பிஹாரில் ஐக்கிய ஜனதாதள ஆட்சியை ஒரே நாளில் கலைத்து, மறுநாளே நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வராக்கி அதிரடி அரசியல் நடத்திய பாஜக, தமிழகத்தில் சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகவை நிலைக்கச் செய்யவும், அதே நேரத்தில் திமுகவின் முயற்சிகளை முடக்கவும் திட்டமிட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் அதிமுக அணிகள் இணைந்து தினகரனின் முயற்சிகளை முறியடிக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x