Published : 15 Aug 2017 10:43 AM
Last Updated : 15 Aug 2017 10:43 AM

அதிகாரம் இருப்பதால் எதையும் சாதிக்கலாம் என நினைக்க வேண்டாம்; தொண்டர் உணர்வை புரிந்து ஆட்சி நடத்துங்கள்- மேலூர் பொதுக்கூட்டத்தில் முதல்வருக்கு தினகரன் எச்சரிக்கை

அட்டை கத்தியோடு யுத்தம் நடத்த வேண்டாம். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆட்சி நடத்துங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்தார்.

மதுரை மாவட்டம், மேலூரில் அதிமுக (அம்மா அணி) சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பேசியதாவது:

எம்ஜிஆர் 1972-ம் ஆண்டில் என்ன காரணத்துக்காக அதிமுகவை தொடங்கினாரோ, அதில் கண்ணும் கருத்துமாக இருந்து 30 ஆண்டுகள் நம்மை வழிநடத்தினார் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு உங்களால் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவின் தலைமையில் அதிமுக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா நினைத்திருந்தால் என்னையோ, எங்கள் குடும்பத்தில் ஒருவரையோ முதல்வராக்கியிருக்க முடியும். நாங்கள் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் அல்ல. இது புரியாத மூடர்கள், நம்மால் உருவாக்கப்பட்ட ஆட்சிக்கு ஆபத்து வந்தவிடும் என பிதற்றி வருகின்றனர். சசிகலாவால் பதவிக்கு வந்தவர்கள், அவர் பெங்களூரு சென்றதும் தலைமைக் கழகத்தில் இருந்து அவரது படங்களை அகற்றினர். அவர்களை இக்கட்டான சூழலில் கூவத்தூர் விடுதியிலேயே விட்டுச் சென்றிருந்தால், இப்போது காரில் பவனி வர முடியுமா?

இந்த கூட்டத்துக்கு வந்த தொண்டர்களை போலீஸார் தடுத்துள்ளனர். மேலூர் கூட்டத்துக்கு சென்றால் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள் என தொழிற்சங்க நிர்வாகிகள் மிரட்டப்பட்டுள்ளனர். நீங்கள் எத்தனை சோதனைகளைத் தாண்டி வந்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். நம்மால் உருவாக்கப்பட்ட அம்மாவின் அரசில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது பாவச்செயலா? இது ஆட்சியை கவிழ்க்கும் செயலா? அதிமுகவை நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டியதுள்ளது. இதற்காக உங்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. இழந்த சின்னத்தை மீட்டெடுத்து நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இந்த கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி கிடைக்காமல் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றுள்ளோம். தலைமை கழகத்தில் பூட்டிய அறையில் வெறும் 30 பேர் உட்கார்ந்து கொண்டு இந்த இயக்கத்தை நடத்திவிடலாம், தொண்டர்களை அடக்கிவிடலாம் என நினைத்தால் பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டதாக நினைப்பது போலாகும்.

ஆட்சியை இழக்க வேண்டிய சூழல் எங்களுக்கு வராது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மடியில் கனம் உள்ளது என்றால் பயப்படலாம். இயக்கம்தான் பெரியது என நினைத்து யாருடைய அச்சுறுத்தலுக்கும் ஆட்படாமல் எம்எல்ஏக்கள் இங்கு வந்துள்ளனர். இன்னும் 3 எம்எல்ஏக்கள் இங்கு வருவதாக இருந்தது. அவர்களைக் கடத்திச் சென்று சென்னையில் அடைத்து வைத்துள்ளனர்.

துணை பொதுச் செயலர் நியமனம் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றியது ஏன்? இதற்கு யாருடைய நிர்பந்தம் காரணம்?

கட்சியைப் பலப்படுத்த சிலரின் தலை கனத்தை இறக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. பதவியில் இருந்து மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள். அப்படி செய்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் மக்களைச் சந்திக்க முடியும். மாபெரும் படையை வைத்துள்ளோம். இந்த படையை வைத்து தேர்தலில் வெற்றி பெற்ற வேண்டும் எனறால் ஆட்சியை பயன்படுத்தி நல்ல திட்டங்களை செயல்படுத்துங்கள்.

அட்டை கத்தி யுத்தத்தை விட்டுவிட்டு, கட்சியை அபகரிக்கலாம், கையில் ஆட்சி இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது என்பதை மறந்துவிட்டு ஒழுங்காக ஆட்சியை நடத்துங்கள். எம்எம்எல்ஏக்கள் மட்டும் கட்சியல்ல. எம்எல்ஏக்களை மட்டும் வைத்துக்கொண்டு எதையும் சாதிக்கலாம் என நினைக்கக்கூடாது. நமது எஜமானார்கள் தொண்டர்கள்தான். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

நீதி விசாரணை வேண்டும்

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி விசாரணை கேட்கிறார்கள். தர்மயுத்தம் நடத்துவதாக கூறுகிறார் ஓ.பன்னீர்செல்வம். நீதி விசாரணை கேட்பவர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது உடனிருந்தவர். நீதி விசாரணை நடத்தினால் முதலில் அவர்தான் விசாரிக்கப்படுவார். பொதுச் செயலர் சார்பில் அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிப்படும் என்றார் தினகரன்.

பங்கேற்ற எம்பி, எம்எல்ஏக்கள்

அதிமுக எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், வசந்தி முருகேசன், ராதாகிருஷ்ணன், செந்தில்நாதன், நாகராஜன் மற்றும் எம்எல்ஏக்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், ஏழுமலை, சுந்தரராஜ், சந்திரபிரபா, கதிர்காமு, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், முருகன், எஸ்டிகே.ஜக்கையன், ரங்கசாமி, மாரியப்பன் கென்னடி, பாலசுப்ரமணியன், உமா மகேஸ்வரி, ஜெயந்தி பத்மநாபன், முத்தையா, சுப்பிரமணியன் ஆகியோருடன் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கூட்ட மேடையில் திவாகரன் மகன் ஜெய்ஆனந்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேடைக்கு முன் வரிசையில் அவர் அமர்ந்திருந்தார்.

முக்கிய நிர்வாகிகள் சிலர் அவரிடம் பேசிவிட்டு சென்றனர். நாஞ்சில் சம்பத், சிஆர் சரஸ்வதி, குண்டுகல்யாணம், கட்சியின் கர்நாடக செயலர் புகழேந்தி ஆகியோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x