Published : 07 Aug 2017 08:46 AM
Last Updated : 07 Aug 2017 08:46 AM

கேரளாவில் ஆக. 12-ம் தேதி புகழ்பெற்ற நேரு ட்ராபி படகுப் போட்டி: இருட்டுக்குத்தி படகுக்கு தலைமை ஏற்கும் 3 வயது சிறுவன்

கேரள மாநிலம், ஆலப்புழா அருகில் உள்ள புன்னமடா ஏரியில் ஆண்டுதோறும் நடக்கும் நேரு ட்ராபி படகுப் போட்டி, இந்த ஆண்டு வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஒரு படகுக்கு 3 வயது சிறுவன் தலைமை ஏற்கவிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தை கடவுளின் தேசம் என்பார்கள். அந்த அளவுக்கு இயற்கை வளங்கள் அங்கு கொட்டிக் கிடக்கின்றன. அதிலும் ஆழப்புழா மாவட்டத்தின் பெருமைக்கு அங்குள்ள புன்னமடா காயல் கூடுதல் அழகு சேர்க்கிறது. இந்தக் காயலில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் இரண்டாம் சனிக்கிழமை ஜவஹர்லால் நேரு ட்ராபி படகுப் போட்டி நடக்கிறது. கேரளத்தில் இதனை தண்ணீரில் நடக்கும் குட்டநாடு ஒலிம்பிக் என வர்ணிக்கின்றனர். இதனைக் காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். ஆழப்புழா மாவட்ட நிர்வாகம் முன்னின்று நடத்தும் இப்போட்டிகளை காண ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு லட்சம் மக்கள் இங்கு திரள்கின்றனர்.

குட்ட நாடு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமானோர் இப்போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். படகுப் போட்டியில், படகின் தன்மைக்கு ஏற்ப சுண்டன், வெப்பு, இருட்டுக்குத்தி, சுருளன் என பல பிரிவுகள் உள்ளன. இதில் பங்கேற்கும் படகுகள் 100 அடி வரை நீளம் கொண்டவை. இதில் 100-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து துடுப்பு போடுவது கண்களுக்கு விருந்தாக அமையும். ஓட்டப்பந்தயத்தில் கோடு கிழிப்பதைப் போல காயலுக்குள்ளும் ஒரே நேரத்தில் 4 படகுகள் அவர்களது எல்லைக்கோடு தாண்டாமல் சீறிப் பாயும். மொத்தம் 1.4 கிலோ மீட்டர் தூரத்தை யார் முதலில் கடப்பது என்பது தான் போட்டியாகும்.

காலங்காலமாக நடந்து வந்த இப்போட்டியை 1952-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி வைத்தார். அப்போது ஆர்வமிகுதியில் வெற்றி பெற்ற சுண்டன் வள்ளத்தில் அவரும் ஏறி, படகு தளம் வரை சென்றார். தொடர்ந்து வெள்ளிக் கேடயம், ரூ.1000 பரிசும் வழங்கி கவுரவித்தார். அப்போது முதல், நேரு ட்ராபி என்ற பெயரில் ஆண்டுதோறும் படகுப்போட்டி நடந்து வருகிறது. 65-வது ஆண்டாக வரும் 12-ம் தேதி நேரு ட்ராபி படகுப் போட்டி நடைபெற உள்ளது.

கேப்டனாகும் 3 வயது சிறுவன்

இந்த படகுப் போட்டியில் பலரும் தலைமுறை, தலைமுறையாக பங்கேற் றும் வெற்றி பெற்றும் வருகின்றனர். குட்டநாடு அருகில் உள்ள எடத்துவாவை பூர்வீகமாகக் கொண்ட அச்சன்குஞ்சு மூணுதைக்கால் குடும்பமும் அப்படித்தான். போட்டிகளில் பங்கேற்பதற்கு என்றே இவர்களிடம் கேப்ரியல் சுண்டன், மூணுதைக்கால் இருட்டுக்குத்தி, ஆப்ரகாம் லிங்கன் மூணுதைக்கால் வேபு என 3 படகுகள் உள்ளன. இதில் இருட்டுக்குத்தி ‘ஏ’ கிரேடு படகு ஒன்றுக்கு கேப்டனாக களம் இறங்குகிறார் அச்சன் குஞ்சுவின் பேரன் எய்டன் (3).

இதுகுறித்து எய்டனின் தந்தை ஆலன் கூறும்போது, “படகுப் போட்டியில் என் மகன் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். அதிலும் துடுப்புப் போட்டு ஓட்டுபவர்களைப் பார்த்து அதேபோல் இயங்கத் தூண்டப்பட்டான். அதனால் இந்த ட்ராபியில் இருட்டுக்குத்திக்கு அவனே தலைமை ஏற்கவுள்ளான். இதில் மற்றவர்கள் முன்னின்று செயல்படுவார்கள். குழந்தையாக இருந்தாலும் அவனது உழைப்பும், நம்பிக்கையும், அவன் எடுத்து வரும் பயிற்சியும் நிச்சயம் வெற்றியை பெற்றுத் தரும்” என்றார்.

3 வயது சிறுவன் இப்போட்டியில் பங்கேற்பது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறவும் வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x