Published : 17 Aug 2017 09:47 AM
Last Updated : 17 Aug 2017 09:47 AM

இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்: விவசாயிகளைக் காக்க தவறிவிட்டதாக புகார்

மத்திய, மாநில அரசுகள் விவசாய விரோத போக்கில் செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்து, இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பங்கேற்று பேசியதாவது: பெரு முதலாளிகளுக்கு ரூ.80 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்த மோடி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அதிகாரம் இல்லை என்கிறார்.

தமிழகத்துக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்ற நிலை உள்ளது. கட்சியின் பெயரையும், சின்னத்தையும் காக்க முடியாத முதல்வர் பழனிசாமி அடிக்கடி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேச இவர்களுக்கு அக்கறையில்லை என்றார்.

திருவாரூர் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: விவசாயத் தொழிலில் 2 மடங்காக லாபத்தை உயர்த்துவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். விளைபொருட்களுக்கு நியாயமான விலை தராமல் லாபத்தை எப்படி 2 மடங்காக்க முடியும். மகாராஷ்டிர விவசாயிகள் காலவரையற்ற போராட்டம் நடத்திய பின், அம்மாநில அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது. விவசாயிகளுக்காக தமிழக எதிர்க்கட்சிகளும் இணைந்து காலவரையற்ற போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பங்கேற்றார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x