

வறட்சியால் பயிர் செய்ய முடியாவிட்டாலும், விவசாயிகள் இழப்பீடு பெறுவதற்கான புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தோட்டக்கலைத் துறை அறிமுகம் செய்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள், பூக்கள், நெல் மற்றும் பல்வகை உணவுப் பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாததால், பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. வைகை அணையில் தண்ணீர் திறந்து விடப்படாததால் வைகை ஆறும் வறண்டது. அதனால், நெல் சாகுபடி முற்றிலும் பொய்த்தது. இதற்கிடையே, காய்கறிகளை சொற்ப விவசாயிகளே சாகுபடி செய்கின்றனர்.
மாவட்டத்துக்கு தேவையான காய்கறிகள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. வறட்சியால் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, விவசாய சாகுபடி பரப்பு குறைந்ததால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. அதனால், விவசாயிகள் விவசாயத்தைக் கைவிடுவதை தவிர்க்கவும், அவர்களை ஊக்குவித்து சாகுபடி பரப்பை அதிகரிக்கச் செய்யவும், தற்போது பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் (PMFBY) மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம், மாநில அரசின் மானியத்துடன் நடப்பு ஆண்டில் காரீப் பருவத்தில் (2017-18) தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், மரவள்ளி மற்றும் வாழை பயிர்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.
இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குதல், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்வது, நவீன சாகுபடி தொழில்நுட்பங்களை கடைபிடிக்க விவசாயிகளை ஊக்குவித்தல், உணவு உற்பத்தியை அதிகரிக்க கடன் உதவி தொடர்ந்து கிடைப்பதை உறுதிப்படுத்தி பயிர் சாகுபடியை மேம்படுத்துதல் போன்றவை, இந்த திட்டத்தின் நோக்கம்.
முதற்கட்டமாக வெங்காயம், மரவள்ளி மற்றும் வாழையை பயிரிடும் விவசாயிகள் அனைவரும் (குத்தகை விவசாயிகள் உட்பட) இத்திட்டத்தில் சேரத் தகுதியானவர்கள். பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கோ. பூபதி கூறியதாவது:
விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலம் வரையும், அறுவடைக்குப் பிந்தைய காலத்திலும், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது. மழையில்லாமல் சில நேரம் விதை நடவு பணிகளை செய்யாமலேயே இழப்பு ஏற்படும். அதனால், விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் நடவு செய்யாவிட்டாலும், நடவு செய்து மகசூல் பெற முடியாமல் பாதிக்கப்பட்டாலும் இழப்பீடு வழங்கப்படுகிறது.
இதற்காக காப்பீட்டுத் திட்டத்தில் வெங்காயத்திற்கு, மரவள்ளி, வாழைக்கு காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும். இதன் அடிப்படையில் ஏக்கருக்கு விவசாயிகள் வெங்காயத்திற்கு ரூ.30,000 காப்பீட்டுத் தொகைக்கு ரூ.1,500 பிரிமியத் தொகையும் (5 சதவீதம்), மரவள்ளிக்கு ரூ.15,700 காப்பீட்டு தொகைக்கு ரூ.769-ம், கிழங்குக்கு (4.60 சதவீதம்), வாழைக்கு ரூ. 47,000 காப்பீட்டு தொகைக்கு ரூ1,833-ம் (3.90 சதவீதம்) கட்ட வேண்டும்.
இந்த திட்டத்தில் வெங்காய சாகுபடியில் பயன்பெற அலங்காநல்லூர், செல்லம்பட்டி, கொட்டாம்பட்டி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மேலூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி பகுதி கிராம விவசாயிகளும், வாழை சாகுபடியில் திருமங்கலம், அலங்காநல்லூர், செல்லம்பட்டி, கள்ளிக்குடி, சேடப்பட்டி, திருப்பரங்குன்றம் வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், மரவள்ளிக்கு வாடிப்பட்டி வட்டார கிராம விவசாயிகளும் இந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். சந்தேகம், தெளிவுபெற தோட்டக்கலைத் துறை அலுவலர்களை விவசாயிகள், 9894170188 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.