Published : 26 Aug 2017 05:51 PM
Last Updated : 26 Aug 2017 05:51 PM

ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார். அவரை சந்திக்க திமுக நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்த பின்னர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மை இழந்துவிட்டதால் அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டது.

இதே போன்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகளும் கோரிக்கை வைத்து ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளன. ஆளுநர் சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிடாவிட்டால் நாங்கள் குடியரசுத் தலைவரை சந்திப்போம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கத்தமிழ் செல்வன் பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஆளுநர் எப்போது தமிழகம் வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவருக்கும் இருந்த நிலையில் இன்று ஆளுநர் சென்னை வந்தார். சென்னை வருவதன் நோக்கம் குறித்து பலவித யூகங்கள் கூறப்பட்டாலும் நாளை சென்னை வர உள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை வரவேற்கவே ஆளுநர் சென்னை வந்துள்ளார் என ஆளுநர் அலுவலக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

சென்னையில் தங்கியுள்ள ஆளுநரை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தித்து தமிழக சட்டப்பேரவை  உடனடியாக கூட்டச்சொல்லி வலியுறுத்துவார்கள் என தெரிகிறது. முக்கியமாக முக்கிய எதிர்க்கட்சியும் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் உள்ள திமுக அழுத்தமாக இதை வலியுறுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது சென்னை வந்துள்ள ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக திமுக தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு ஆளுநரை  சந்திக்கும் பட்சத்தில் சட்டப்பேரவையை கூட்டுவதற்கு திமுக வேண்டுகோள் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x