Published : 20 Aug 2017 11:44 AM
Last Updated : 20 Aug 2017 11:44 AM

மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் கூடுதலாக 3 ஆயிரம் மருத்துவ இடங்களை உருவாக்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்தில் மாணவர்கள் பயன் பெறும் வகையில் கூடுதலாக 3 ஆயிரம் மருத்துவ இடங்களை உருவாக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறிய தாவது:

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெற மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். ஓராண்டுக்கு மட்டும் விலக்கு பெறுவது, தமிழக உரிமையை நிரந்தரமாக விட்டுக் கொடுக்கும் நடவடிக்கையாகும்.

நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தினால், பிளஸ் 2-வில் அதிக கட் ஆஃப் மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவர். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தினால், நீட் தேர்வில் அதிக ரேங்க் வாங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

இருதரப்பு மாணவர்களும் பாதிக்காத வகையில் சமரசத்தீர்வு காண வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, இரு தரப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் கூடுதல் மருத்துவ இடங்களை உருவாக்கி வழங்க வேண்டும். 2,600 இடங்களை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் தமிழகஅரசு கோரியிருப்பது வரவேற்கத்தக்கது. இதை 3,000 இடங்களாக உயர்த்த வேண்டும். இதற்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி கொடுக்காவிட்டால், மத்திய அரசே தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இடங்களை அதிகரிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களை அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி அவசியம் அல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது. இதை கருத்தில்கொண்டு, மத்திய மாநில அரசுகள் மருத்துவ இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் தனியாக நுழைவுத் தேர்வை அடுத்த ஆண்டு முதல் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x