

ஆவின் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஆவின் நிறுவனம் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மாதாந்திர பால் அட்டை கோரி விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் ஆவின் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பிறகே அட்டை வழங்கப்படும். முகவரி மாற்றம் இருப்பின், நுகர்வோர் மாறுதல் கோரும் இடத்தில் உள்ள வட்டார அலுவலகங்களில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
பரிசோதனைக் கூடத்தில் பால் எவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என்பதை நுகர்வோர் அறியும் வண்ணம், ஆய்வு விவரங்களை ஆவின் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பாலகங்களை நவீனமயமாக்கவும், பால் பொருட்கள் விற்பனையை அதிகப்படுத்த சென்னை மற்றும் சுற்றுப்புற இடங்களில் அமைந் துள்ள பெரிய வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், மக்கள் அதிகம் கூடும் விழாக்கள் நடக்கும் இடங்களில் விற்பனை செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில் பால்வளத் துறை ஆணையர், நிர்வாக இயக்குநர் சுனீல் பாலீவால், ஆவின் இணை நிர்வாக இயக்குநர் ஆர்.கஜலட்சுமி, பொதுமேலாளர் (விற்பனை) எஸ்.கே.கதிர்வேலு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.