Published : 10 Aug 2017 03:47 PM
Last Updated : 10 Aug 2017 03:47 PM

துணை பொதுச் செயலாளராக செயல்படத் தடையில்லை; கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டால் ஈபிஎஸ் மீது நடவடிக்கை: டிடிவி தினகரன் பேட்டி

 

துணை பொதுச் செயலாளராக நான் செயல்பட யாரும் தடைவிதிக்க முடியாது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டால் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று ஈபிஎஸ் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கழக சட்ட விதிகளின்படி, டிடிவி தினகரனின் துணை பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ''சசிகலா சொன்னதால் முதல்வராகப் பொறுப்பேற்றவர் எடப்பாடி பழனிசாமி. அவர் எப்போது தேர்தல் ஆணையத்தின் தலைவராக ஆனார் என்று தெரியவில்லை.

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின்போது எங்கள் கட்சியின் சின்னமும், பெயரும் முடக்கப்பட்டது. ஆனால் தற்போது டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று அவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால் தலைமைக் கழக அறிக்கையில், அனைத்திந்திய அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்தியுள்ளனர்.

'முதல்வர் பதவி விலக நேரிடும்'

இது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறும் செயல். இதுகுறித்து யாராவது புகார் கொடுத்தால் முதல்வரும், அவர் தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலக நேரிடும்.

இதுகூடத் தெரியாமல், அவர்கள் அவசர கோலத்தில் செயல்படுகிறார்கள். நான் தமிழ்நாடு முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன் என்ற பயத்தில் இருக்கின்றனர். வீட்டில் இருக்கும் என்னை தினந்தோறும் தொண்டர்கள் சந்தித்து உற்சாகமூட்டி வருகின்றனர். இதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால், பொதுச் செயலாளராக சசிகலாவை முறைப்படி நியமித்தது அவர்கள்தான் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அப்படியெனில் அவரால் நியமிக்கப்பட்ட அனைத்து நியமனங்களும் செல்லும்.

சசிகலாவால் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், கட்சியின் அனைத்து பணப் பரிமாற்றங்களையும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதால்தான் முன்பு பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தால் கட்சியின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த முடியவில்லை.

திண்டுக்கல் சீனிவாசனின் நியமனம் செல்லும் எனில் சசிகலாவால் நியமிக்கப்பட்ட எனது நியமனம் ஏன் செல்லாது?

'பொதுச் செயலாளருக்கு நியமனப் பதவிகளை அறிவிக்கும் அதிகாரம் உண்டு'

ஒருவர் கட்சியில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு, அவருக்கு நியமனப் பதவிகளை அறிவிக்கும் அதிகாரம் உண்டு. கழகத்தின் பொதுச் செயலாளர் கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் என்னை துணை பொதுச் செயலாளராக அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து மேலும் விளக்க வேண்டுமெனில், மதிமுகவில் இருந்த நாஞ்சில் சம்பத், 2012 டிசம்பர் 4-ல் அதிமுகவில் இணைந்தார். அன்றைக்கே ஜெயலலிதா அவரை கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்தார். அதனால் நியமனப் பதவிகளை அறிவிக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு உண்டு.

ஜெயலலிதா இறந்த அசாதாரண சூழலில் சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். சிறிது காலத்தில் அவர் என்னை துணை பொதுச் செயலாளராக நியமித்தார். இதில் எந்த தவறும் இல்லை.

'அறுவை சிகிச்சையை மேற்கொள்வேன்'

50, 100 பேர் சேர்ந்து துணை பொதுச் செயலாளரை ஒதுக்கிவைத்தால் கட்சி கட்டுப்பாட்டில் இல்லை என்று நினைக்கிறீர்களா? அது தவறு.

துணை பொதுச் செயலாளராக நான், கட்சி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். தேவைப்பட்டால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் அதையும் செய்வேன்.

நடப்பதே நாங்கள் உருவாக்கிய ஆட்சிதான். இதில் எங்களுக்கு என்ன எதிர்ப்பு இருக்கிறது? எதிரிகளிடம் சேர்ந்துகொண்டு தன்னை முதல்வராக்கிய, தங்களை அமைச்சர்களாக்கியவர்களைத் தூக்கி எறிந்தால் அவர்களைத் தண்டிக்கும் தைரியமும், மன வலிமையும் எங்களுக்கு இருக்கிறது.

’மடியில் கனம் இருப்பதால் பயம்’

கடந்த 4-ம் தேதியில் இருந்தே நான் கட்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கட்சியை பலப்படுத்த நான் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். ஆனால் அவர்கள் கட்சியை பாதிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்கள். மடியில் கனம் இருப்பதால், வழியில் பயப்படுகிறார்கள்.

என்னைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம், கட்சியில் பொதுச் செயலாளரான சசிகலாவுக்கு மட்டுமே உண்டு'' என்றார் தினகரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x