சிறுதுளி அமைப்பு மூலம் தூர்வாரப்பட்ட குளங்களில் நீர் கொள்ளளவு அதிகரிப்பு

சிறுதுளி அமைப்பு மூலம் தூர்வாரப்பட்ட குளங்களில் நீர் கொள்ளளவு அதிகரிப்பு
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆற்றுப்படுகையில் உள்ள குளங்களில் சிறுதுளி அமைப்பு மூலம் தூர் வாரப்பட்ட நிலையில், குளங்களின் நீர் கொள்ளளவு திறன் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால், நொய்யல் ஆறும், அதைச் சார்ந்த குளங்கள், குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. இந்த நிலையில், சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்புக்காக சிறுதுளி அமைப்பு சார்பில், குளம், குட்டைகளைத் தூர் வாருதல், தடுப்பணை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கோவை ஆட்சியர் த.ந.ஹரிஹரன் அனுமதியின் பேரில், நொய்யல் ஆற்றுப் படுகையில் உள்ள குளங்களைச் சீரமைத்து, நீர் மேலாண்மையை வலுப்படுத்தும் பணி நடைபெற்றது. இதன்படி, உக்குளம், புதுக்குளம், கொளரம்பதி, கங்கநாராயணசமுத்திரம், சொட்டையாண்டிக்குட்டை ஆகிய குளங்கள் தூர் வாரப்பட்டன. தூர் வாரும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தக் குளங்களின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது.

இது குறித்து சிறுதுளி அமைப்பு நிர்வாகி வனிதா மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டில் சுமார் 7.2 லட்சம் ஹெக்டேர் பரப்பில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. மழையின்மை, போதிய பராமரிப்பின்மை உள்ளிட்ட காரணங்களால், நீர்நிலைகளில் தண்ணீரின் கொள்ளளவு குறைந்து கொண்டே செல்கிறது. எனவே, நீர்மேலாண்மை மூலம் நீர் நிலைகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். கோவையில் உள்ள 5 குளங்களில் தூர் வாரிய பிறகு, அவற்றின் நீர் கொள்ளளவு கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.இந்தப் பணிகளுக்கு பல்வேறு அமைப்புகள், சங்கங்கள், நிறுவனங்கள் உதவிபுரிந்துள்ளன.

மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அனுமதியுடன், பேரூர் வட்டத்தில் உள்ள 46 குட்டைகளைத் தூர் வாரி, நீர்வரத்து வாய்க்கால்களைச் சீரமைக்கும் பணி நடக்கிறது.

மாளிகைக்குட்டை, நாதேகவுண்டன்புதூர் குட்டை, வடிவேலாம்பாளையம் குட்டை, சென்னனூர் குட்டை, ஆட்டுக்காரன் கோயில் குட்டை, ஓடைக்கரை குட்டை, சாவடிக்குடை, செலம்பனூர் குட்டை, குழந்தை கவுண்டன்குட்டை, குமரன் குட்டை ஆகியவை தூர் வாரப்பட்டுள்ளன.

மழைக் காலத்தில் தண்ணீரைச் சேமிக்கும் வகையில், மாதம்பட்டி ஊராட்சியில் கரடிமடை அருகேயுள்ள சிற்றோடையில் 7 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. முண்டந்துறை தடுப்பணையில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவைக் கட்டுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு நீர்நிலைகள் பாதுகாப்பு, நீர்மேலாண்மைப் பணிகள் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

கடந்த 2016-ம் ஆண்டில் முண்டந்துறை தடுப்பணையில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவுகளை கட்டுப்படுத்த, தடுப்பணையின் உட்பகுதியில் மெல்லிய கான்கிரீட் சுவரை உருவாக்கி நீர்க்கசிவை கட்டுப்படுத்தி, தடுப்பணையில் உள்ள வண்டல் மண்ணை ஓரளவுக்குத் தூர் வாரி, செப்பனிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும், தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் இந்தப் பணியை முடிக்க முடியவில்லை. இதனால் தடுப்பணையில் கசிவுநீர் வெளியேறுவது தொடர்ந்தது. எனவே, நடப்பாண்டில் நீர்க்கசிவுக் கட்டுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in