Published : 19 Aug 2017 10:28 AM
Last Updated : 19 Aug 2017 10:28 AM

டாஸ்மாக்கில் விற்பது மதுவா எரி சாராயமா? படுமோசமாகி வரும் குடிநோயாளிகள் நிலை!

மிழகத்திலிருந்த 6,826 மதுக்கடைகள் தற்போது 2,741 கடைகளாக சுருங்கியிருக்கிறது. இருந்தாலும் மது விற்பனையில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம், மதுவின் தரம் நாளுக்கு நாள் படுமோசமாகி வருவதால் குடி தொடர்பான நோய்களும் அடிமைத்தனமும் அதிகரித்து வருகிறது.

உண்டு உறைவிட குடி மையங்கள்

தமிழக குடிநோயாளிகளிடம் அண்மைக்காலமாக நிலவும் பெரும் சந்தேகம் இது. “முன்னை போல இல்லப்பா, இப்ப எல்லாம் ஒருமுறை குடிச்சா திரும்பக் திரும்பக் குடிக்கச் சொல்லுது. தினமும் ஏழெட்டு குவாட்டராச்சும் ஓடிடுதுப்பா. போதையும் பெருசா இல்லை. சரக்குல வேறு எதையோ கலக்குறாங்க...” என்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கேற்ப, அனைத்து மதுக்கடைகளும் இப்போது, உண்டு உறைவிட குடி மையங்களைப் போல ஆகிவிட்டன. அதிகாலை 6 மணிக்கு பாரில் பிளாக்கில் மது வாங்கிக் குடிப்பதில் தொடங்கும் இவர்களின் குடிப் பழக்கம் இரவு வரை நீடிக்கிறது.

நண்பர்களிடம் காசு வாங்குவது, சின்னதாய் கூலி வேலை செய்து சம்பாதிப்பது, மதுக்கடைக்கு வருவோரிடம் கையேந்துவது, வண்டியை துடைத்து விட்டு காசு கேட்பது, பாட்டில் பொறுக்கி விற்பது, பாரில் சப்ளையாராகச் சேர்ந்து சம்பாதித்தபடி மது அருந்துவது உட்பட பல்வேறு வகையில் மதுக்கடை களின் வாசலிலேயே சிலர் முழுநேர குடிநோயாளி களாகத் தேங்கிக் கிடக்கிறார்கள். இதில் பெண்களும் சிறுவர்களும் அடக்கம். இரவு நேரங்களில் இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். சிலர் தாங்களாகவே பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களிலும் இதே பாணியிலான குடிநோயாளிகள் அதிகரித்து விட்டார்கள்.

தமிழகத்தில் 12 மதுபான ஆலைகள், 7 பீர் ஆலைகள் இருக்கின்றன. இவை ஆண்டுக்கு 54 கோடி லிட்டர் மது, 25 கோடி லிட்டர் பீர் உற்பத்தி செய்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக 4,125 கடைகள் மூடப்பட்ட நிலையிலும் இவற்றின் உற்பத்தி குறைக்கப் படவில்லை. அதேசமயம், மதுபான விற்பனையும் குறையவில்லை. நெடுஞ்சாலைகளில் இருந்த 1,750 கடைகள் மூடப்பட்டபோது கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் 12 % விற்பனை குறைந்தது. ஆனால், தற்போது தினமும் சராசரியாக 65 கோடி ரூபாய்க்கு கல்லா கட்டுகிறது டாஸ்மாக் நிர்வாகம். இது பழைய உச்சபட்ச விற்பனையே என்கின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்.

விற்பனை குறையாமைக்கு என்ன காரணம்?

இவ்வளவு கடைகளை மூடிய பிறகும் பழைய விற்பனை தொடர்வது ஏன்? என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் தனசேகரனிடம் கேட்டோம். “டாஸ்மாக்கின் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடிக்கு விற்பனை என்பது பிரதான குடிகாரர்களை மட்டுமே நம்பியிருக்கிறது. எப்போதாவது மது அருந்துபவர்களை சார்ந்து இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. அதேசமயம், தமிழகத்தில் குடிநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் இது காட்டுகிறது. ஆபத்தான இந்தப் போக்கு மாறவேண்டுமானால் சமூக அளவில் குடிநோய் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் அல்லது அனைத்து மதுக்கடைகளையும் அரசு மூடவேண்டும்.” என்றார் அவர்.

குடிக்கும் மதுவும் தரமானதுதானா?

உலகளாவிய மதுத் தரத்தை தமிழக குடிநோயாளிகள் பக்கத்தில்கூட நெருங்க முடியாது. இந்திய மதுத்தரம் (Indian standard alcohol specifications) என்று ஒன்று உண்டு. என்னென்ன விகிதாச்சாரத்தில் பொருட்களைக் கலந்து எப்படி மதுவைத் தயாரிக்க வேண்டும் என்பது குறித் தெல்லாம் வரையறுக்கப்பட்ட ஒரு கணக்கு இருக் கிறது. மதுவுக்கு மட்டுமின்றி, மது அடைக்கப்படும் பாட்டில்களின் தடிமன், பாட்டில் மூடி மற்றும் கார்க்கின் தடிமன், இவை எல்லாவற்றுக்கும் ஐ.எஸ்.ஓ. அமைப்பு (ஐ.எஸ் - 4450/2005) தரம் நிர்ணயித்துள்ளது. மது பாட்டில்களுக்கு எடை தாங்கும் பரிசோதனை, வெப்பக் கதிர்வீச்சு பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

நமது நாட்டுத் தரத்தின்படி தண்ணீர் ஸ்பிரிட் வடிகட்டப்பட்ட மொலாசஸ் எசன்ஸ் என்பது மதுவுக்கான அடிப்படைப் பொருள். இதில் 'பிரீமியம்’, 'மீடியம்’, 'லோ’ என்று மூன்று தரங்கள் உண்டு. பிரீமியம் மற்றும் மீடியம் தர மது பானங்களில் நியூட்ரல் ஸ்பிரிட் (Neutral spirit) கலக்க வேண்டும். அதாவது, நன்றாக வடிகட்டிய, குறைந்த காட்டம் கொண்ட ஸ்பிரிட் இது. இவற்றை மரத்திலான கொள்கலன்களில் அடைத்து, நொதிக்க வைத்த பழரசத்தைக் கூடுதலாகச் சேர்ப்பார்கள். 'லோ’ ரக மதுவில் ரெக்டிஃபெய்டு ஸ்பிரிட் (Rectified spirit) கலப்பார்கள். அவ்வளவாக வடிகட்டாத ஸ்பிரிட் இது. இவற்றை எல்லாம் கலந்துகட்டி ஒவ்வொரு வகை மதுவுக்கு ஏற்ப, குறிப்பிட்ட நாட்கள் கொள்கலன்களில் இருப்பு வைக்கவேண்டும். பின்பு, அதில் ஒரு பாட்டில் (குவாட்டர், ஆஃப், ஃபுல்) சாம்பிள் எடுத்துப் பரிசோதனை செய்தால், அதில் 42.86 - 43.86 சதவீதம் ஆல்கஹால் இருக்க வேண்டும். இதுதான் விற்பனைக்கு உகந்த மது.

கரும்பு கழிவிலிருந்து தயாராகும் மது

உலக நாடுகள் உணவுப் பொருட்களிலிருந்து மட்டுமே மதுவை உற்பத்தி செய்கின்றன. பனை - தென்னை கள், பழங்கள், தானியங்கள், காளான், புற்கள், தேன் மற்றும் பூக்களில் இருந்து மதுவை தயாரிக்கிறார்கள். ரஷ்யாவின் வோட்காவை உருளைக் கிழங்கிலிருந்தும், ஸ்காட்லாந்தின் ஸ்காட்ச்சை கோதுமை, மக்காச் சோளத்திலிருந்தும், சீனாவின் மவுத்தாய் மற்றும் ஜப்பானின் சாக்கேவை அரிசியிலிருந்தும், ஃபிரான்ஸின் ஷாம்பெயினை திராட்சையிலிருந்தும், கோவாவின் ஃபென்னியை முந்திரியிலிருந்தும் தயாரிக்கிறார்கள். இந்தோனேஷியா, இலங்கை, ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தென்னை, பனை பொருட்களிலிருந்தும் மது தயாரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மகாராஷ்டிரா, புனே, கோவா உள்ளிட்ட ஒரு சில இடங்கள் நீங்கலாக அனைத்து மாநிலங்களிலும் கரும்புக் கழிவான மெலாசஸே மது தயாரிப்புக்கான பிரதான மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

போட்டியில்லை... தரமும் இல்லை

தமிழகத்தில் மதுபான கொள்முதலை அரசே தீர்மானிக்கிறது. அரசு விற்பனை செய்யும் மதுபானங் களை மட்டுமே மக்கள் குடிக்க கட்டாயப் படுத்தப்படுகி றார்கள். அதனால், மது உற்பத்தி செய்யும் ஆலைகளுக் கிடையே தரத்துக்கான போட்டி இல்லை. ஆனால், பிற மாநிலங்களில் மதுவை தனியார் விற்கிறார்கள். அதனால், மக்கள் விரும்பும் தரமான மதுபானத்தை அளித்தால் மட்டுமே அவர்களால் லாபகரமாக தொழில் செய்யமுடியும். அதனால், அங்கு தரத்தை அடிப்படையாகக் கொண்டு கொள்முதல் நடக்கிறது.

தமிழகத்தின் மதுபான ஆலைகளுக்கு கரும்பு ஆலை களிலிருந்து ‘ரெக்டிஃபெய்டு ஸ்பிரிட்’ (Rectified spirit) வாங்குகிறார்கள். அதனை தங்களது ஆலைகளில் ‘நியூட்ரல் ஸ்பிரிட்’டாக (Neutral spirit) மாற்றுகிறார்கள். அதனை மூன்று நிலைகளில் ஆவியாக்கி வடிகட்டு கிறார்கள். இவ்வாறு மூன்று நிலைகளில் வடிக்கப்படும் திரவத்துடன் சர்க்கரை பாகிலிருந்து தயாரிக்கப்படும் ‘கேரமில்’, மதுபான வகைக்கான எசன்ஸ், தண்ணீர் கலந்து பெரிய கொள்கலன்களில் நிரப்புகிறார்கள். இந்த கொள்கலன்களில் 72 மணி நேரம் அவற்றை இருப்பு வைக்கிறார்கள். தரமான மது கிடைக்க இவை 14 நாட்கள் இருப்பு வைக்கப்பட வேண்டும். மூன்று நிலைகளில் ஆவியாக்கி வடிகட்டப்படுவதில் முதலில் வடிக்கப்படுவதிலிருந்து உயர் ரக மதுபானமும் இரண்டாவதாக வடிக்கப்படுவதிலிருந்து நடுத்தர ரகமும் மூன்றாவதாக வடிக்கப்படுவதிலிருந்து கடைசி ரக மதுவும் தயாரிக்கப்படுகிறது.

இதனை எல்லாம் கண்காணிக்க ஒவ்வொரு மதுபான ஆலையிலும் ஒரு துணை கலெக்டர், நான்கு துணை தாசில்தார்கள், ஐந்தாறு தொழில்நுட்ப உதவியாளர்கள் என சுமார் 15 அரசு ஊழியர்கள் நிரந்தரமாக பணியிலிருக்க வேண்டும். இவர்கள் முன்னிலையில் 72 மணி நேரத்துக்குப் பிறகு கொள்கலன் திறக்கப்பட்டு, ஒரு லிட்டர் மதுவை ஒரு குடுவையில் எடுப்பார்கள். இப்போது கொள்கலன், குடுவை இரண்டுக்குமே ‘சீல்’ வைக்கப்படும். அது அரசின் அறிவியல் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்படும். அங்கு அந்த மது பரிசோதிக்கப்பட்டு, அதில் ஆல்கஹாலின் அளவு 41.86 - 42.86 சதவீதத்துக்குள் இருந்தால் மட்டும் அது விற்பனைக்கு அனுமதிக்கப்படும். பின்னர் மதுவை பாட்டிலில் நிரப்புவதிலும் ஏகப்பட்ட தரக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

எல்லாவற்றிலும் விதிமுறை மீறல்கள்

ஆனால், தமிழகத்தில் இந்த நடைமுறைகள் எல்லாம் கண் துடைப்புக்காக மட்டுமே நடக்கின்றன. இங்கு மதுவை உற்பத்தி செய்வது அரசியல் செல்வாக்கு கொண்ட நபர்களே. அதனால், பெரும்பாலான விதி முறைகள் மீறப்படுகின்றன. பெரும்பாலான ஆலைகளில், பரிசோதனைக்கு அனுப்பப்படும் அந்த ஒரு லிட்டர் மதுவை மட்டுமே சரியான தரத்துக்கு தயாரித்து அனுப்பி சான்றிதழ் பெறுகிறார்கள். சில ஆலைகளில் அதுவும் கிடையாது. சாராயம் காய்ச்சுவதுபோல அப்படியே காய்ச்சி பாட்டிலில் நிரப்புகிறார்கள். விலை குறைவான மது ரகங்களில் பாட்டிலை கழுவுவதுகூட கிடையாது. அதனால்தான் மது பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி, பல்லி எல்லாம் மிதக்கின்றன.

தோசை மாவு, தயிர், ரொட்டி போன்று நொதிக்க வைத்துத் தயாரிப்பதுதான் மதுவும். ஆனால், தமிழகத்தில் குடிநோயாளிகள் குடிப்பது கொதித்த பின்பு கிடைக்கும் எரி சாராயத்தைத்தான். முன்பை விட, மனம் மற்றும் உடல் சார்ந்த நோய்கள் அதிகரித் ததற்கும் குடிநோயால் ஏற்படும் மரண விகிதங்கள் அதிகரித்ததற்கும் இதுவே முக்கியக் காரணம்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x