Published : 01 Aug 2017 08:31 AM
Last Updated : 01 Aug 2017 08:31 AM

புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழா: தேசிய சுகாதாரக் குழும இயக்குநர் வலியுறுத்தல்

மனிதனை பண்படுத்தக்கூடிய புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் புத்தகத் திருவிழாவை மாவட்டந்தோறும் நடத்த வேண்டும் என்று தேசிய சுகாதாரக் குழும இயக்குநர் தாரேஷ் அகமது கேட்டுக் கொண்டார்.

தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் சென்னை புத்தகத் திருவிழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 21-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. சென்னை புத்தகத் திருவிழாவில் சென்னை நூல்கள் கலந்துரையாடல், கவிதை வாசிப்பு, தமிழ் சினிமா 100 என்பன போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இப்புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில், சிறந்த 11 தமிழ் நூல்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கு தேசிய சுகாதாரக் குழும இயக்குநர் தாரேஷ் அகமது தலைமை தாங்கிப் பேசும்போது, “புத்தக வாசிப்பு நம்மை நாமே பண் படுத்திக் கொள்ள உதவும். இதன் மகத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டும். இதுபோன்ற புத்தகத் திருவிழாவை மாவட்டந்தோறும் நடத்த வேண்டும். அது படைப்பாளர்களை ஊக்கப்படுத்து வதாக அமையும்” என்றார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது, “ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு அறிமுகப்படுத்துவதே இலக்கியம். அதற்கு மொழி கிடையாது. மனித சமூகம் மேலாங்க இலக்கியம் பயனளிக்கும். ஒவ்வொரு தமிழ் இலக்கிய நிகழ்ச்சியிலும் வேறொரு மொழி படைப்பாளியை அழைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன், மலையாள எழுத்தாளர் அசோகன் செர்பில் ஆகியோர் பேசினர். முன்னதாக தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழும நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் வரவேற்றார். நிறைவில் ராம.லட்சு மணன் நன்றி கூறினார்.

“கடந்த 11 நாட்கள் நடந்த இப்புத் தகத் திருவிழாவில், 252 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 172 பதிப்பாளர் கள் இத்திருவிழாவில் பங்கேற்றனர். ரூ.5 முதல் ஆயிரம் ரூபாய் வரையிலான 4 லட்சம் புத்தகங்கள் விற்பனையாயின. ஒரு லட்சம் வாசகர்கள் புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்தனர்” என்று தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழும நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x