Published : 22 Aug 2017 08:57 AM
Last Updated : 22 Aug 2017 08:57 AM

டிடிவி.தினகரனுடன் 18 எம்.எல்.ஏ.க்கள்: சென்னையில் தொடர் ஆலோசனை

அதிமுக இரு அணிகள் இணைப்பு நடந்துள்ள நிலையில் அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று 3-வது நாளாக அவரது வீட்டில் நாள் முழுக்க ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசியலில் அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து கடந்த சில நாட்களாக பரபரப்புடன் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் அதிமுகவின் முதல்வர் பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று பிற்பகலில் ஒன்றாக இணைந்தன.

இந்த அணிகள் இணைந்ததால் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று 3-வது நாளாக தீவிர ஆலோசனை நடத்தினார். இதில், டிடிவி.தினகரன் மேலூரில் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 20 எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் மட்டும் கலந்துகொண்டனர். இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.

டிடிவி.தினகரன் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக இரு அணிகள் இணைந்த பிறகு அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் சசிகலாவை நீக்கினால், அதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வது, நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தை நாடுவது, சசிகலாவை நீக்கினால், தமிழக ஆளுநரை சந்தித்து 18 எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தினகரன் ஆதரவு நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்செல்வன், செந்தில்பாலாஜி, பழனியப்பன், வெற்றிவேல் உள்பட 16 பேர் நேற்று பகல் 11 மணியளவில் டிடிவி.தினகரன் வீட்டுக்கு வந்தனர். அதன்பிறகு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் வந்தனர். நீண்டநேரம் ஆலோசனை நடைபெற்றதாகவும் அதனால்தான் 18 எம்.எல்.ஏ.க்கள் நீண்டநேரம் வரை வெளியே வரவில்லை என்று தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாசலம், சந்திரபிரபா ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காததால் தினகரன் தரப்பினர் கலக்கமடைந்துள்ளனர்.

நேற்றைய பரபரப்பான சூழ்நிலையில், டிடிவி.தினகரனை ஆதரிக்கும் அதிமுக தொண்டர்கள் அவரது வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். ஆங்காங்கே நின்று கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர். அதிமுக அம்மா கட்சி செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழன், மனோகர் உள்ளிட்டோரும் தினகரனை சந்தித்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x