Published : 29 Aug 2017 01:58 PM
Last Updated : 29 Aug 2017 01:58 PM

கைதாகிறாரா நாஞ்சில் சம்பத்?- காவல்துறை வழக்குப்பதிவு

தமிழக பாஜக தலைவர் தமிழிசையை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாஞ்சில் சம்பத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மதிமுகவில் முன்னணி பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

பின்னர் கொள்கைபரப்பு துணைச்செயலாளராக நியமிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத் அதிமுக தலைமை கழக நட்சத்திர பேச்சாளராகவும் செயல்பட்டு வந்தார்.

பரபரப்பு பேச்சுக்கு சொந்தக்காரரான நாஞ்சில் சம்பத் தொலைக்காட்சியில் அதிமுக கூட்டணி குறித்து பேசியதற்காக அவரது கட்சிப்பதவியை ஜெயலலிதா பறித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இன்னோவா காரை திருப்பிக்கொடுத்த நாஞ்சில் சம்பத்தை மீண்டும் அழைத்து இன்னோவா காரை திரும்பக் கொடுத்து கட்சிப்பணி ஆற்றுமாறு சசிகலா கேட்டுக்கொண்டார்.

அதுமுதல் சசிகலா தரப்பின் தீவிர பிரச்சாரகரான நாஞ்சில் சம்பத் அதிமுக ஓபிஎஸ் அணி , எடப்பாடி அணி என இரண்டாக பிளவு பட்டபோது ஓபிஎஸ் அணியை கடுமையாக விமர்சித்தார்.

பின்னர் இரு அணிகளும் இணைந்தது முதல் தினகரன் தரப்புக்கு ஆதரவாக தீவிரமாக பேசி வருகிறார். நேற்று அதிமுக எம்.எல்.ஏ, எம்பிக்கள் கூட்டத்திற்கு பின்னர் பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத் பாஜக தலைமையை கடுமையாக விமர்சித்தார்.

பாஜக தலைவர் தமிழிசையையும் கடுமையாக விமர்சித்ததாக அவரது ஆதரவாளர்கள் நேற்று பட்டினப்பாக்கத்தில் உள்ள நாஞ்சில் சம்பத் இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் தனியார் உணவு விடுதிக்கு உணவருந்த சென்ற நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட்டனர். அவரது காரின் காற்றை பிடுங்கிவிட்டனர்.

பின்னர் போலீசார் தலையிட்டு நாஞ்சில் சம்பத்தை மீட்டு அனுப்பினர். பாஜகவின் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் என்பவர் புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் போலீசார் நாஞ்சில் சம்பத் மீது 354( அவதூறாக பேசுவது) 499( பொது வெளியில் அவதூறாக பேசுவது , பேட்டி அளிப்பது) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

நாஞ்சில் சம்பத் மீது மேலும் பல காவல் நிலையங்களில் பாஜகவினர் புகார் அளித்து வருகின்றனர். இதுவரை போடப்பட்ட வழக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வழக்கு என்றாலும், அடுத்தடுத்த புகார் நெருக்கடி காரணமாக போலீசார் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x