

அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பை யார் தாமதப்படுத்துகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சின்ன ஒதுக்கீடு, யாருக்கு அதிகாரம் உள்ளிட்டவை குறித்து தேர்தல் ஆணையத்திடம் நேரில் முறையிட இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி சென்ற ஓ.பன்னீர் செல்வம், தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
பன்னீர் செல்வம் பேச்சின் விவரம்
"அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரால் நியமிக்கபட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் தடுத்து நிறுத்தி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டேன்"
சீனிவாசனுக்கு அதிகாரம் இல்லை
"குறிப்பாக அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சி விதிகளின் படி அமைப்புச் செயலாளருக்கும், பொருளாளருக்குமே அதிகாரம் உள்ளது, அந்த அடிப்படையில் பொருளாளராக இருக்கும் தனக்கே கட்சி நிதியை கையாளும் உரிமை உள்ளது என்று வங்கிகளுக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் வங்கிகள் அந்த கடிதத்தை பொருட்படுத்தாமல் சசிகலாவால் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் சீனீவாசன் கட்சி பணத்தை கோடி கோடியாக எடுத்து கையாள அனுமதித்தது எப்படி? இது குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளேன்"
சசிகலா குடும்பம் வெளியேறவில்லை
சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று நாங்கள் கோரி வரும் நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் இன்னும் மறைமுகமாக கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள், கட்சியின் அதிகாரப்பூரவ் பத்திரிக்கையில் இன்னமும் பொதுச் செயலாளர் சசிகலா துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் என்று தான் வெளிவருகிறது, இதை எப்படி ஏற்க முடியும். அடிப்படை நிபந்தனைக்கு எதிராக அந்த அணியினர் செயல்படும் போது எப்படி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெறும்
யார் முட்டுக்கட்டை என்பதை மக்கள் அறிவார்கள்
இரு அணிகளும் இணைந்து விடக் கூடாது என்பதில் சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். அதனால் தான் பேச்சுவார்த்தை மிகவும் மந்த கதியில் சென்று கொண்டிருக்கிறது. இணைப்புக்கு யார் முட்டுக் கட்டை போடுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
ரஜினிகாந்த் நல்ல மனிதர்
ரஜினிகாந்தை பொறுத்தவரை, நல்ல மனிதர் சிறந்த ஆன்மீகவாதி சுதந்திர நாட்டில் யாருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் உண்டு அப்படித்தான் அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி ரஜினிகாந்த் கருத்து கூறியுள்ளார். ரஜினிகாந்தின் கருத்து சரியா தவறா என்பது குறித்து முடிவு செய்பவர்கள் மக்களே”
கேபி முனுசாமி பேச்சு:
பன்னீர் செல்வத்தோடு இணைந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.பிமுனுசாமி, தமிழக அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான். அந்த வெற்றிடத்தை நிரப்பக் கூடிய நபராக பன்னீர் செல்வம் திகழ்வார் என்று கூறினார்.