Published : 24 Aug 2017 06:58 PM
Last Updated : 24 Aug 2017 06:58 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் பருவகாலப் பயிர்கள் பற்றிய தகவல்கள்

 

வறட்சிக்கு பெயர் போன ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 13 நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் பருவகாலப் பயிர்கள் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் கண்மாய்க்குள் சிதறிக் கிடக்கும் கற்கள் தூண்களிலே கல்வெட்டுகள் இருப்பதாக இவ்வூர் ஆசிரியர்கள் கு.முனியசாமி, சா.செல்வகுமார் ஆகியோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே.ராஜகுரு அக்கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தார்.

இந்தக் கல்வெட்டுகளைப் பற்றி தொல்லியல் ஆய்வாளர் வே. ராஜகுரு கூறியதாவது,

கண்மாய்க்குள் கல்வெட்டுகள்

1985-ம் ஆண்டு பேரையூர் கண்மாயில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பின், இக்கண்மாயின் குமிழி மடை, செங்கமடை ஆகியவற்றை உயர்த்திக் கட்ட தோண்டியபோது, அப்பகுதிகளில் பெரிய அளவிலான கற்கள் புதைந்த நிலையில் இருந்து வெளிப்பட்டுள்ளன. அப்போது அம்மடைகளின் அருகிலேயே அக்கற்களை ஓரமாகப் போட்டுவிட்டு மடை கட்டியுள்ளனர். அதில் வெளிவந்த கற்களில் தான் கல்வெட்டுகள் உள்ளன.

சிவன் கோயில்

குமிழி மடை பகுதியில் அதிகளவிலான கற்கள் சிதறிக் கிடக்கின்றன.இக்கற்களில் 9 கல்வெட்டுகளும், அதே கண்மாயின் செங்கமடை பகுதியில் இரு கல்வெட்டுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இவை துண்டுக் கல்வெட்டுகள் ஆகும். இக்கல்வெட்டுகள் யாவும் 13-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த எழுத்துக்கள் உள்ளன. இக்கல்வெட்டுகளை கொண்டு இக்கண்மாய் பகுதியில் சிவன் கோயில் இருந்து அழிந்துள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது. அழிந்துபோன சிவன் கோயில் விமானத்தின் அடிப்பகுதியான ஜகதி, பட்டிகையில் இருந்த கற்களில் தான் கல்வெட்டுகள் உள்ளன.

கல்வெட்டு செய்தி

கி.பி.1238 முதல் கி.பி.1258 வரை மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய் கீர்த்தியுடன் துவங்குவதால் அவருடைய காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதியாகிறது. இதில் ஈழம், கடாரம், கவுடம், தெலிங்கம் ஆகிய நாடுகளின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டில் உள்ள உத்தமபாண்டிய நல்லூர் என்னும் ஊர், மேலக்கொடுமலூர் ஆகும். இவ்வூர் சோழர் ஆட்சிக்காலத்தில் உத்தமசோழநல்லூர் என இருந்ததை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் உத்தமபாண்டிய நல்லூர் என மாற்றியுள்ளார். கல்வெட்டில் உள்ள அண்டநாட்டுப் பெருமணலூர் மதுரை திருப்புவனம் அருகில் உள்ளது.

நீளமான ஒரு தூணில் உள்ள கல்வெட்டில் திருக்காமக் கோட்டம்,குடிதாங்கி, நல்லூர் என வருகிறது. திருக்காமக் கோட்டம் என்பது சிவன் கோயிலில் இருக்கும் அம்மனுக்கான கோயில் ஆகும். வெட்டிபாட்டம், பஞ்சுபீலி ஆகிய வரிகளின் பெயர்கள் காணப்படுகின்றன.

இறையிலி

குறிப்பிட்ட சிலர் வைத்த நிவந்தங்களுக்காக அவர்கள் பெயரில் நடக்கும் பூசைக்கட்டளையை சந்தி என்பார்கள்.காலை மாலை பூஜைக்காக இக்கோயிலில் நல்லான் என்பவரால் நல்லான் சந்தி உருவாக்கப்பட்டு இருந்திருக்கிறது. இதற்காகவும், வேண்டும் நிமந்தங்களுக்காகவும், இக்கோயிலுக்கு இறையிலி தேவதானம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நல்லூர் எனும் ஒரு ஊரை விற்று இருப்பதை அறியமுடிகிறது. மேலும் செங்கமடை பகுதியில் உள்ள கல்வெட்டில் ஆவுடைய நாச்சியார் என்பவரால் வழங்கப்பட்ட தேவதானம் சொல்லப்பட்டுள்ளது.

விவசாயம்

இக்கல்வெட்டில் ஐப்பசிக்குறுவை, கோடைக் குறுவை ஆகிய விவசாய பருவங்கள் கூறப்பட்டுள்ளன. கரிசல் நிலம் கருஞ்செய் என கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. பத்து மா எனும் ஒரு நிலஅளவு இதில் உள்ளது.

குறுவை பட்டத்தில் நடவு செய்யப்படும் நெற்பயிர் குறுகிய காலத்தில் கதிர்வரக் கூடியதாகும். இவை வறட்சி, மழை, பனி, காற்று ஆகிய இயற்கைச் சீற்றங்கல் தாக்காமல் நல்ல விளைச்சலை தரக்கூடியது.

அழிந்த கோயில் தற்போது கண்மாய்க்குள் இருக்கும் கற்களும், தூண்களும் கோயிலின் விமானத்தின் அடிப்பகுதியாக உள்ளன. எனவே இக்கோயில் அழிந்து போன கோயிலாக இருக்கலாம்’’ என்றார் தொல்லியல் ஆய்வாளரான வே. ராஜகுரு.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x