Published : 20 Aug 2017 10:58 AM
Last Updated : 20 Aug 2017 10:58 AM

அதிமுக 3 ஆக பிரிந்துள்ளதால் அரசு நிர்வாகம் செயலற்றுள்ளது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

அதிமுக மூன்றாக பிரிந்து கிடப்பதால் அரசு நிர்வாகம் செயலற்றுக் கிடக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலப்படுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆக.18 முதல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தென் சென்னை மாவட்டம், பல்லாவரம் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்து ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

வறுமையற்ற, வகுப்புவாத மற்ற, தீவிரவாதமற்ற, சாதிபேத மற்ற இந்தியாவை உருவாக்கி வருவதாக பிரதமர் சுதந்திர தினத்தன்று பேசினார். பாஜக புதிய இந்தியாவை உருவாக்கி வருகிறதா, வறுமை ஒழிக்கப்பட்டு வருகிறதா, வகுப்புவாதம் தடை

செய்யப்பட்டு வருகிறதா என்றால் எதுவும் நடக்கவில்லை. வரிவிதிப் புக்கு உட்படாத 500-க்கும் மேற் பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை அரசு விதித்துள்ளது. சிறு,குறு தொழில்கள் நாசமாக்கும் வகையில் ஜிஎஸ்டி உள்ளது. மாட்டிறைச்சி விவகாரத்தில் 29 பேரை ஆர்எஸ்எஸ் கொலை செய்துள்ளது.

ஒரு முறைசாரா தொழிலாளி மாதம் 8 ஆயிரம் ரூபாய் கூலி பெற்றால் கூட அவருக்கு ரேஷன் பொருள் கிடைக்காது என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதனை மாநில அரசும் செயல்படுத்த உள்ளது. 3 கோஷ்டிகளின் முட்டல் மோதல்களே செய்தியாக மாறி, மக்கள் பிரச்சினைகள் திசைதிருப்பப்படுகிறது. ஒவ் வொரு கோஷ்டியையும் மிரட்டி பாஜக தனக்கு சாதகமாக மாற்றி தமிழகத்தில் நுழையப்பார்க்கிறது.

தற்போது அதிமுக மூன்றாக பிரிந்து கிடப்பதால் அரசு நிர்வாகம் செயலற்றுக் கிடக்கி றது. காவிரியில் மேகதாதுவில் அணை கட்ட நீதிமன்றத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வருகிறது. மாநில நலனை பாதுகாக்க முடியாமல், பாஜகவுக்கு ஆதரவாக தமிழக அரசு நடந்து கொள்கிறது. இத்தகைய சூழலில் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து வீரியமான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x