Last Updated : 15 Apr, 2014 10:39 AM

 

Published : 15 Apr 2014 10:39 AM
Last Updated : 15 Apr 2014 10:39 AM

நம்மை நாமே நொந்துக்கறதுல என்ன இருக்கு?- ஆர்.எஸ்.எஸ். முன்னாள் பொதுச்செயலாளர் மிசா நாராயணன் பேட்டி

1980களில் பாஜக துளிர்விட்ட காலங்களில் தமிழ்நாட்டில் அக் கட்சிக்கு நெஞ்சுரம் தந்தவர் ‘மிசா’ நாராயணன். ஆர்.எஸ்.எஸ். முன்னாள் பொதுச்செயலரான இவர், 1989, 1991 மக்களவைத் தேர்தல்களில் பாஜக சார்பாக கோவையில் தனித்து நின்று சுமார் 50 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர்.

தமிழ்நாட்டில் பாஜக அப்போது பெற்ற அதிக வாக்குகள் இது தான் என்று சொல்லலாம். அந்த வாக்குகளுக்குச் சொந்தக்காரருக்கு தற்போது வயது 82.

கோவை ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் சாலையில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார். குழந்தைகள் இல்லை. ‘அவருக்கு தனித்து செயல்பட முடியாது; நான்தான் உதவி செய்யவேண்டும். காது கேட்காது; எனவே எதுவும் சத்தமா கேளுங்க!’ என்று அவர் மனைவி லோகநாயகி அறிவுறுத்த அவரை “தி இந்து”வுக்காக பேட்டி கண்டோம்.

கோவையில் முதன்முதலாக நீங் கள் போட்டியிட்டபோது பா.ஜ.க வின் நிலை எப்படி இருந்தது?

பாஜக அப்பத்தான் தமிழ்நாட் டிலேயே அறியப்படுது. அப்ப நான் கட்சியோட மாவட்ட அமைப்புச் செயலாளரா இருந்தேன். அந்த தேர்தல் பாஜகவை மக்கள் மத்தி யில் கொண்டு போக மிகவும் உதவியா இருந்தது. அதை நான் பயன்படுத்திட்டேன்.

அந்த தேர்தலில் எவ்வளவு பணம் செலவு செஞ்சீங்க? கட்சி செலவுக்கு ஏதும் தந்ததா?

கட்சியில் ரூ.25 ஆயிரம் தந் தாங்க. நான் என் சொந்தக்காசு ரூ.2 லட்சம் செலவு செஞ்சேன். இப்ப அந்த காசு நோட்டீஸிற்கு கூட பத்தாது.

கட்சியில் இப்ப இருக்கீங்களா?

சாதாரண உறுப்பினரா இருக்கேன். இப்ப பொள்ளாச்சி ரோட்ல இருக்கிற கோசாலைக்கு அமைப்பாளரா இருக்கேன். என்னால ஆன ஆலோசனைகளை சொல்லிட்டு வர்றேன்.

நாராயணன் சரி.. அது என்ன மிசா நாராயணன்?

நெருக்கடி நிலையின்போது முதல்ல மிசாவுல ஜெயிலுக்கு போனவன் நான். 21 மாசம் உள்ளே இருந்தேன். ஜூன் 25-ம் இந்திரா காந்தி நெருக்கடி நிலை பிரகடனம் பண்ணினாங்க.

ஜூலை 4-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செஞ்சாங்க. அப்ப நான் அந்த இயக்கத்தின் மாநில பொதுச்செயலா ளரா இருந்தேன். என்னை உடனே கைது செஞ்சுட்டாங்க. கோவை சிறையில் கொடுங்குற்றவாளி களை போலவே நடத்தினாங்க.

இயக்கத்தில் இவ்வளவு தீவிரமா இருந்திருக்கீங்க. உங்களை இப்ப உள்ள பா.ஜ.க தலைவர்கள் வந்து பார்க்கிறார்களா? உதவிகள் ஏதும் செய்கிறார்களா?

சி.பி.ராதா கிருஷ்ணன், எஸ்.ஆர்.சேகர், நந்தகுமார்ன்னு அப்பப்ப வந்து பார்த்திருக்காங்க. சில சமயம் பொன் ராதாகிருஷ்ணன் வந்து பார்த்தார். 2 வருஷம் முன்னால ஆஸ்பத்திரியில வந்து பார்த்துட்டு மருந்து செலவுகள் செஞ்சாங்க.

உங்க செலவுகளுக்கு என்ன செய்யறீங்க?

இருந்த சொத்துக்களை யெல்லாம் வித்து கட்சிக்கும் தேர்தலுக்கும் செலவு செஞ்சு முடிச்சாச்சு. இந்த வீட்டு வாடகை ரூ. 5 ஆயிரம். அதை அண்ணன் மகன் தந்துடறான். மாசம் செலவுக்கு ரூ. 2 ஆயிரமோ, 3 ஆயிரமோ வரும்; அதை என் மச்சினர் கனடாவுல இருக்கார். அவர் பார்த்துப்பார். எனக்கு தேவைகள் குறைவு இல்லையா?

கட்சிக்காகப் பாடுபட்டேன். யாரும் கண்டுக்கலையே என்ற தனிமை வாட்டம் உங்களுக்கு இல்லையா?

அந்த கேள்வி எதுக்கு வரணும்? என் ஆத்ம திருப்திக்காக இயக் கத்தில் ஈடுபட்டேன். இந்திரா காந்திக்கு என்னவோ கோபம். எமர்ஜென்சி கொண்டு வந்தார். விபத்து மாதிரி ஜெயிலுக்கு போனேன். அதுக்காக நம்மை நாமே நொந்துக்கறதுல என்ன இருக்கு?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x