பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் குவியும் பாலிதீன் கழிவுகள்

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் குவியும் பாலிதீன் கழிவுகள்
Updated on
1 min read

ஆழியாறு வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் குவியும் பாலிதீன் குப்பையால், வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வனத்துறை பல ஆண்டுகளுக்கு முன்பே தடை விதித்தது. இருப்பினும், வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளால் வீசியெறியப்பட்ட பாலிதீன் கழிவுகளை, பல்வேறு தன்னார்வ அமைப்புகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றி வருகின்றனர்.

ஆழியாறு பூங்கா பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளில் உணவுப் பொருட்களை பாலிதீன் கவர்களில் வைத்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்குகின்றனர். இதை வாங்கி பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் அவற்றை வனப்பகுதியில் வீசி விட்டு செல்கின்றனர். உணவு கழிவுகளோடு விட்டுச் செல்வதால் அதை உட்கொள்ளும் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. குறிப்பாக குரங்கு அருவி பகுதியில் பாலிதீன் குப்பை பரவிக் கிடக்கிறது. வால்பாறை சாலையின் இருபுறங்களிலும் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் என குவிந்து கிடக்கின்றன.

இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, ‘வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது வனப் பாதுகாப்புச் சட்டத்தின் படி அபராதம் விதிக்க வேண்டும். குரங்கு அருவிப் பகுதியில் பாலிதீன் பொருட்களை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகளிடம் அபராதம் விதிக்க பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை’ என்றனர்.

இது குறித்து பொள்ளாச்சி வனச்சரகர் ரவிச்சந்திரன், ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் உணவு சமைப்பதும் மற்றும் உணவு பொருட்களின் கழிவுகளை விட்டுச்செல்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். பாலிதீனால் வனப்பகுதியில் ஏற்படும் தீமைகள் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in