

உச்ச நீதிமன்றத்தில் வரும் 11-ம் தேதி விசாரணைக்கு வர உள்ள காவிரி தொடர்பான வழக்கு, தங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.
காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு அளித்த இறுதித் தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களுமே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. மேலும், கடந்த 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் வழங்க வில்லை. இதனால் ஏற்பட்ட ரூ.2,480 கோடி இழப்பை, கர்நாடகா நஷ்டஈடாக வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த வழக்குகள், கடந்த மார்ச் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 11-ம் தேதியிலிருந்து தொடர்ந்து 10 தினங்களுக்கு இறுதி விசாரணை நடத்தப்படும் எனவும், அதுவரை தமிழகத்துக்கு கர்நாடகா நாள்தோறும் 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
ஆனால், அதன்படி கர்நாடகா தண்ணீர் திறந்துவிடவில்லை. தற்போது, அங்கு தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த ஜூன் 29-ம் தேதியிலிருந்து தலா 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தில் வரும் 11-ம் தேதி காவிரி வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்கு வர உள்ளது. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் அதைத் தவிர்க்கும் விதமாகவே, கர்நாடகா அரசு, தற்போது காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதாகக் கூறப்படுகிறது. மேலும், காவிரி வழக்கில் தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் தண்ணீரை திறப்ப தாக அம்மாநில முதல்வர் சித்தரா மைய்யாவும், தனது அறிக்கையில் உறுதிப் படுத்தியுள்ளார்.
இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி எஸ்.ரெங்க நாதன் கூறியது:
தமிழகத்தில் உள்ள அணை களில் தண்ணீரை திறப்பதற்கும், மூடுவதற்கும் வரையறுக்கப்பட்ட விதிகள் உள்ளன. அதன்படி, குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்பட்டு, ஜனவரி 28-ல் மூடப்படும். அதன்பின், குடிநீருக்கு மட்டுமே திறக்கப்படும்.
ஆனால், இந்த நடைமுறை கர்நாடகாவில் பின்பற்றப்படுவ தில்லை. குடிநீர் தேவைக்காக எனக் கூறிவிட்டு, ஆண்டு முழுவதும் பாசனத் தேவைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், அணைகளில் தண்ணீர் இல்லை என்று காரணம் கூறி, தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கின்றனர். எனவே, தமிழகத்தில் குறுவை சாகுபடியை முற்றிலும் இழந்துவிட்டோம். இதற்கெல்லாம் வரும் 11-ம் தேதி தொடங்கும் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றார்.