Published : 29 Jul 2017 08:38 AM
Last Updated : 29 Jul 2017 08:38 AM

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்ற முழுஅமர்வு உத்தரவு

தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை வெட்டுவதற்கு விதித்த தடையை நீக்கியுள்ள உயர் நீதிமன்ற முழுஅமர்வு, முதற்கட்டமாக நீர் நிலைகளில் உள்ள கருவேல மரங்களை படிப்படியாக அகற்ற வேண்டும் என்றும், இதுதொடர்பாக 8 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவி்ட்டுள்ளது.

நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக் கருவேல மரங்களை தமிழகம் முழுவதும் வெட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே உத்தர விட்டிருந்தது.

இந்நிலையில், சீமைக் கருவேல மரங்களை அழிப்பது அவற்றைச் சார்ந்து இருக்கும் மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் பெரிய இழப் பாக அமையும் என்றும், எனவே சீமைக்கருவேல மரங்களை வெட்ட தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் மேகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை கடந்த ஏப்ரல் 27-ம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, ‘‘தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை வெட்ட இடைக்காலத் தடை விதித்திருந்தது. மேலும் இது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வனத்துறை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில், சென்னை ஐஐடி பேராசிரியர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்து வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முழுஅமர்வில் நடந்தது.

காட்டுக்கருவேல மரங்களை வெட்டக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கும் தலைமை நீதிபதி அமர் வுக்கு மாற்றப்பட்டது. இதன்காரண மாக நேற்று வைகோவும் நேரில் ஆஜராகி வாதிட்டார். வனத்துறை சார்பில் கூடுதல் அரசு பிளீடர் எம்.சந்தானராமன், மனுதாரர் மேகநாதன் சார்பில் வழக்கறிஞர் மோகன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதுபோல 12 பேர் கொண்ட நிபுணர் குழுவும் தங்களது அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘சீமைக் கருவேல மரங்களின் சாதக, பாதகம் குறித்து ஆய்வு நடத்தியுள்ள நிபுணர் குழு அவற்றால் பாதிப்புதான் அதிகம் என்றும், ஆனால் எந்தஅளவிற்கு பாதிப்பு ஏற்படுத் தும் என்பது தொடர்பாக ஆராய இன்னும் அவகாசம் தேவை என்று கோரியுள்ளது கருவேல மரங்களை அகற்றும் இடத்தில் நடவேண்டிய மாற்று மரக்கன்று களின் பெயர்களையும் இக்குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் சீமைக் கரு வேல மரங்களை ஒரே நேரத்தில் அகற்ற முடியாது.

படிப்படியாகத் தான் அகற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே குழுவின் அறிக்கையில் உள்ள சில பகுதிகளை ஏற்கிறோம். எனவே, சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக நீர்நிலை களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக அகற்ற வேண்டும். எங்கெல்லாம் இயந்திரங் களைப் பயன்படுத்தி வெட்ட முடியும், எங்கெல்லாம் இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது என்பதைக் குழுவினர் உதவியுடன் அதிகாரிகள் கண்டறிந்து, அங்கு சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

மேலும் வெட்டிய இடத்தில் மீண்டும் இந்த மரங்கள் வளராமல் தடுக்க நில மேலாண்மைத் திட்டத்தின்கீழ் தகுந்த நடவடிக் கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக தமிழக அரசு 8 வாரத் தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோபர் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x