

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங் கலம் கிராம மக்களின் அச்சத்துக்கு காரணம் பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய்கள் அமைவிடம் குறித்த குறியீடு இல்லாததே என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணெய்க் கிணறுகளை அமைத்து, பூமிக்கடியில் பல ஆயிரம் அடியிலிருந்து கச்சா எண்ணெய் எடுத்து, அதை பூமிக்கடியில் 6 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் அனுப்பி ஆங்காங்கே உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் என தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணியை ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் கமலாபுரம், கருப்பூர், களப்பால், வெள்ளக்குடி, எருக்காட்டூர், அடியக்கமங்கலம், செம்பியபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பூமிக்கடியில் இருந்து உறிஞ்சப்படும் கச்சா எண்ணெயை ஓஎன்ஜிசி நிறுவனமும், கெயில் நிறுவனமும் குழாய்கள் மூலம் 40 கிலோமீட்டர் தொலைவுள்ள நரிமணத்துக்கு அனுப்பி வைக்கிறது.
எண்ணெய் குழாய்
திருவாரூர் மாவட்டத்தில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய் செல்லும் இடங்களில் 500 அடிக்கு ஓர் இடத்தில், எண்ணெய்க் குழாய் உள்ளது என்பதற்கான குறியீடு (அடையாளத்துக்கான பலகை) அமைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அந்த இடத்தில் எண்ணெய்க் குழாய் செல்வதை எளிதாக அறிந்து கொள்ளமுடிகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கதிராமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் 11 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு பூமிக்கடியில் உறிஞ்சப்படும் கச்சா எண்ணெய், குழாய் மூலம் குத்தாலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு வயல்கள் வழியாகச் செல்லும் குழாய்கள் எந்த இடங்களில் பதிக்கப்பட்டுள்ளன என்பதற்கான எவ்வித அடையாளங்களும் தற்போது இல்லை.
இதுகுறித்து கதிராமங்கலத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி லட்சுமி கூறியதாவது:
தீப்பற்ற வாய்ப்பு
15 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட எண்ணெய்க் குழாய்கள் செல்லும் வழித்தடம் பலருக்கும் நினைவில் இல்லை. இதனால், வயலில் இயந்திரங்களைக் கொண்டு உழவு செய்யவும், நெல் அறுவடை செய்யவும் பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். விவசாயப் பணிகளில் இதுபோன்று ஈடுபடும்போது தீப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
குழாய் எங்கு உள்ளது?
கதிராமங்கலம் கடைவீதியில் எண்ணெய்க் கிணறு உள்ளது. ஊரின் மத்தியிலும் பூமிக்கடியில் குழாய்கள் உள்ளன. இதனால், எதற்காகவும் நாங்கள் பூமியைத் தோண்டுவதற்குகூட முடியாமல் அச்சத்தில் உள்ளோம். எந்த குழாய் எங்கு செல்கிறது என்பதே தெரியவில்லை. மக்களின் அச்சத்துக்கு இதுவே காரணம் என்றார்.
இதுகுறித்து, ஓஎன்ஜிசி நிறுவன தொழில்நுட்ப மூத்த அலுவலர் ராஜசேகரனிடம் கேட்டபோது, “எண்ணெய்க் கிணறு ஆரம்பிக்கும் இடம், பிரதான சாலை, மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் பூமிக்கடியில் குழாய் பதிக்கப்பட்டிருக்கும் தகவல், அறிவிப்புப் பலகையில் அச்சிடப்பட்டு பொருத்தப்படுவது வழக்கம். கதிராமங்கலம் கிராமத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால், அப்பகுதி மக்கள் காலப்போக்கில் அவற்றை அகற்றியிருக்கலாம். இப்போது குறியீடு இல்லாத இடங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அறிந்து மீண்டும் அங்கு அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும்” என்றார்.