

கொல்கத்தாவில் இருந்து அந்த மான் சென்ற சரக்கு கப்பல் நடுக் கடலில் மூழ்கியது. அதில் இருந்த 11 ஊழியர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து அந்தமானுக்கு ‘ஐடிடி பேந்தர்’ என்ற சரக்கு கப்பல் நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. அதில் 29 கன்டெய்னர்களில் 500 டன் மணல், 200 டன் இரும்பு, ஒரு கார் ஆகியவை கொண்டு செல்லப்பட்டன. கேப்டன் உட்பட மொத்தம் 11 ஊழியர்கள் பணியில் இருந்தனர்.
நேற்று காலையில், அந்த மானை நெருங்க 120 நாட்டிகல் மைல் தொலைவு இருந்த நிலை யில், மோசமான வானிலை மற்றும் கடல் அலைகளின் சீற்றத் தால் கப்பல் சேதமடைந்தது. அதை சரிசெய்ய ஊழியர்கள் முயன்றும் முடியவில்லை. அதற்குள், கப்ப லின் சில பகுதிகள் உடைந்ததால் தண்ணீர் உள்ளே புகுந்து, கப்பல் மூழ்கத் தொடங்கியது.
கப்பல்கள், விமானங்கள்
இதுகுறித்து, கப்பலில் இருந்து அதன் தலைமை அலுவலகத் துக்கும், கொல்கத்தா துறைமுகத் துக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்திய கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அந்தமான் மற்றும் சென்னையில் இருந்து கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான 2 கப்பல்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தன. கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான 2 விமானங்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன.
இதற்கிடையில், சரக்கு கப்பல் மூழ்க ஆரம்பித்ததும், அதில் இருந்த கேப்டன் உள்ளிட்ட 11 ஊழியர்களும் தண்ணீரில் மிதக் கும் பாதுகாப்புக் கவசங்களை அணிந்துகொண்டு கப்பலின் மேல் பகுதிக்கு வந்துவிட்டதாக கூறப் பட்டது.
மோசமான வானிலை காரணமாக மீட்புக் கப்பல்கள் சம்பவ இடத்துக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்தியக் கடலோரக் காவல் படையின் கப்பல்கள், விமானங்களின் கூட்டு முயற்சியில் 11 வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடலில் மூழ்கிய ‘ஐடிடி பேந்தர்’ சரக்கு கப்பல் 65 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்டது. 1985-ல் டென்மார்க் நாட்டில் தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.