

சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் கல்வி, தனிநபர் கடன் பெற விரும்புவோர், 12-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கடன் முகாமில் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு ) சங்கீதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் சிறுபான்மையினருக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. இக்கழகம் சார்பில் சென்னை மாவட்டத்தில் கடன் பெற விண்ணப்பங்கள் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 12-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. ஒவ்வொரு கடன் திட்டத்துக்கும் தனித்தனியான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன்படி கல்விக்கடனுக்கு, ஜாதி சான்று அல்லது பள்ளி மாற்றுச் சான்று, வருமானம், இருப்பிடம், மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள், உண்மை (bonafied) சான்று, கட்டணம் செலுத்திய ரசீது மற்றும் வங்கி கோரும் இதர சான்றுகளை அளிக்க வேண்டும்.
தனிநபர் கடன் திட்டத்தில், சில்லறை வியாபாரம், கைவினைஞர் மற்றும் மரபு வழிசார்ந்த தொழில், தொழில் மற்றும் சேவை நிலையங்கள், இலகு ரக வாகன போக்குவரத்துக் கடன், விவசாயம் தொடர்பான தொழில்கள் உள்ளிட்டவற்றுக்கும், அபிவிருத்திக்கும் கடன் வழங்கப்படுகிறது.
இந்த கடன்களை பெற, சென்னை அல்லது தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, ஜெயின் மற்றும் பார்சி சமூகத்தவராக இருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். கடன் பெற விருப்பமுள்ளவர்கள் 12-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் லோன் மேளாவில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.