

மாணவ மாணவியர் தொழிற்பயிற்சி பெறும் வகையில் விடுதியுடன் கூடிய 3 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 28 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் துவக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி சில அறிவிப்புகளை வாசித்தார். அதில் அவர் பேசியதாவது:
''தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நலத் திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டும், சமூகப் பாதுகாப்பு சட்டங்கள் உறுதியாக கண்காணிக்கப்பட்டும் வருகின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு கட்டுமானம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் காத்திட, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் (கட்டுமான தொழிலாளர்கள்) நலத் திட்டத்தினையும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தினையும் உருவாக்கினார்.
அவர் காட்டிய வழியில் செயல்படும் அரசு சார்பாக தொழிலாளர் நலன் சார்ந்த பின்வரும் திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
1. அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அத்தொழிலாளர் இயற்கை மரணம் அடைந்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை 15,000/- ரூபாயிலிருந்து 20,000/- ரூபாயாக உயர்த்தப்படும். இதே போன்று அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஈமச் சடங்கு உதவித் தொகை 2,000/- ரூபாயிலிருந்து 5,000/- ரூபாயாக உயர்த்தப்படும்.
2. தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் நலனுக்காகவும், தொழிற்திறன் பெற்ற மனித வளத்தை பெருக்குவதற்காகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது தமிழகத்தில் 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், ஆலங்காயம், ஜோலார்பேட்டை ஆகிய வட்டாரப் பகுதி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் வாணியம்பாடியிலும், ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், அந்தியூர், பவானிசாகர், தாளவாடி ஆகிய வட்டாரப் பகுதி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் கோபிசெட்டிப்பாளையத்திலும், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஆகிய வட்டார பகுதி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் கோட்டூரிலும் தலா 200 மாணவ மாணவியர் தொழிற்பயிற்சி பெறும் வகையில் விடுதியுடன் கூடிய 3 புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் 28 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் துவக்கப்படும்.
3. தொழிலாளர் அரசு ஈட்டுறுதித் திட்டம் என்பது ஒரு விரிவான சமூக பாதுகாப்பு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், தொழிலாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு காப்புறுதி வசதியுள்ள நிறுவனத்தில் வேலையில் சேர்ந்த நாள் முதல் முழுமையான மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 216 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் மற்றும் 10 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் 2,093 படுக்கைகளோடு மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், நடப்பாண்டில் ஒட்டன்சத்திரம், நெல்லியாளம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், பவானி, குன்னூர், கீழ்குண்டா (ஊட்டி), பாப்பிரெட்டிப்பட்டி, அரவக்குறிச்சி, பூதலூர் ஆகிய பத்து இடங்களில் புதிய தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்கள் 12 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் 31,699 தொழிலாளர்கள் பயன் பெறுவர்'' என்றார் முதல்வர் பழனிசாமி.