

‘நீட்’ தேர்வை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக் களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது:
தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோருவது பிச்சையோ, சலுகையோ அல்ல. தமிழகத்துக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமையைத்தான் கேட்கிறோம். ‘நீட்’ தேர்வு மூலம் மாநிலத்தின் உரிமையை பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திண்ணைப் பிரசாரம், தெருமுனைப் பிரசாரம் நடத்த வேண்டும்.
நுழைவுத் தேர்வை எம்ஜிஆர் கொண்டுவந்தபோது திராவிடர் கழகமும், திமுகவும் 21 ஆண்டுகள் போராடி அதை ஒழித்தன. அதுபோலவே ‘நீட்’ தேர்வை ஒழிக்கும்வரை மக்களைத் திரட்டி தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு கி.வீரமணி பேசினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:
நீட் தேர்வால் 9 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்த காலத்தில் மத்திய அரசு இதுபோன்ற முயற்சியை மேற்கொள்ளவில்லை. ஜெய லலிதா இல்லாதபோதுதான் அவரது வலிமை தெரிகிறது. இத்தேர்வை ஒழிக்கும்வரை போராட்டம் தொடர வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை அரசியல் ரீதியாக எதிர்க்க அதிமுக தயாராக இல்லை. ஆளுங்கட்சியை நம்பிப் பயனில்லை. தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க தொடர்ந்து போராடுவோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:
கல்வி தொடர்பான அதிகாரம் மாநிலங்களுக்குத்தான் இருக்க வேண்டும். அதை கபளீகரம் செய்வதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்வி வளத்தை அபகரிப்பதுடன், மாநிலக் கல்வித் திட்டத்தையும் அழிப்பதே மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராடுவோம்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி:
புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக்க துணைநிலை ஆளுநர் அனுப்பிய பரிந்துரையை 2 நாட்களில் குடியரசுத் தலைவர் ஏற்று அனுமதி அளித்தார். ஆனால், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் தரவில்லை. தனது பதவிக்காலம் முடிவதற்குள் குடியரசுத் தலைவர் அனுமதி அளிக்க வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங் உள்ளிட்டோரும் பேசினர்.