Published : 22 Nov 2014 08:40 AM
Last Updated : 22 Nov 2014 08:40 AM

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீர் தேக்க வேண்டும்: பென்னி குக் கனவை நிறைவேற்ற அணை மீட்புக் குழு வலியுறுத்தல்

முல்லை பெரியாறு அணையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் நீர்மட்டம் 142 அடியை எட்டியதால், தென் மாவட்ட மக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.

152 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டு வந்த முல்லைப் பெரியாறு அணையில், கேரள அரசின் தொடர் இடையூறு காரணமாக நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும் தமது உரிமையை நிலைநாட்ட விடாப்பிடியாக இருந்தது. பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு பெரியாறு அணையில் 142 அடிக்குத் தண்ணீரைத் தேக்கிக் கொள்ள அனுமதி அளித்து கடந்த மே 7-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கும் முயற்சியில் தமிழக பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டனர். இதற்காக, அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு கடந்த ஒரு வாரமாக படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று முன்தினம் மாலை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அணையில் 141.90 அடிக்கு தண்ணீர் இருந்ததால், இரவுக்குள் அணை 142 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அணைப் பகுதியில் முகாமிட்டிருந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளும் காத்திருந்தனர். நேற்று அதிகாலை 2 மணிக்கு நீர்மட்டம் 142 அடியை எட்டியது.

அணையின் நீர்மட்டம் 142 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 1400 கன அடியாகவும், வெளியேற்றம் 1400 கன அடியாகவும் இருப்பதாக வெள்ளிக்கிழமை அதிகாலை 2.10 மணிக்கு தமிழக பொதுப்பணித் துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதுகுறித்து ‘தி இந்து’-விடம் பெரியாறு அணை கண்காணிப்புப் பொறியாளர் ராஜேஷ் கூறும்போது, ‘வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியது. நேற்று மதியம் 12 மணிக்கு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1500 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 2025 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது’ என்றார்.

முல்லை பெரியாறு அணை மீட்புக் குழுத் தலைவர் ரஞ்சித் கூறும்போது, ‘142 அடியாக நீர்மட்டம் உயர்த்தப்பட்டதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில், ராமநாதபுரம் மாவட்ட மக்களின் பஞ்சத்தைப் போக்குவதற்காகவே பெரியாறு அணையை பென்னி குக் கட்டினார். அவரது கனவை நிறைவேற்ற பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீரைத் தேக்க வேண்டும். அப்போதுதான், அந்த மாவட்ட மக்களின் தண்ணீர் பஞ்சம் தீரும். மேலும், கேரளத்தால் வருங்காலத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கவும், இழந்துவிட்ட உரிமைகளை மீட்டெடுக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை வேண்டும்’ என்றார்.

பொதுப்பணித் துறையினர், நேற்று பென்னி குக் மணிமண்டபத்தை மின் விளக்குகளால் அலங்கரித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். முல்லைப் பெரியாறு மீட்புக் குழுவினர் 142 தேங்காய்களை சிதறடித்தனர்.

மின் உற்பத்தி அதிகரிப்பு…

அணையில் தண்ணீரைத் தேக்குவதற்காக சில வாரங்களாக விநாடிக்கு 150 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கூடலூர் அருகேயுள்ள லோயர்கேம்பில் மின் உற்பத்தி குறைந்தது. இந்த நிலையில், 4 மாதங்களுக்குப் பிறகு அணையிலிருந்து 2025 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப் படுவதால் லோயர் கேம்பில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

பெரியாறு அணையில் 142 அடிக்கு நீர்மட்டம் உள்ளதை குறிக்கும் அளவீடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x