Published : 12 Jul 2017 08:32 PM
Last Updated : 12 Jul 2017 08:32 PM

நெடுவாசல் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் போராடுவோம்: நவநீதகிருஷ்ணன் எம்.பி. பேட்டி

நெடுவாசல் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் போராடுவோம் என்று அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த 32 எம்.பி.க்கள் இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்திருந்தனர். சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிந்ததும், முதல்வர் கே.பழனிசாமியை அவர்கள் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக நிருபர்களிடம் நவநீதகிருஷ்ணன் எம்.பி., கூறியதாவது:

''குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைவரும் முறையாக வாக்களிக்க வேண்டும் என முதல்வர் அறிவுரை வழங்கினார்.

ஜிஎஸ்டியால் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்களுக்கு விரோதமாக இருக்கும்போது அவற்றை எதிர்க்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தமிழக மக்களின் நலனுக்காக போராட வேண்டும் என்றும் முதல்வர் கூறினார்.

நீட் தேர்வை பொறுத்தவரை சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் ஒப்புதல் பெற்று சட்டமாக வரவேண்டும். தமிழக முதல்வரும் அமைச்சரும் இதற்காக போராடி வருகின்றனர். இதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

நெடுவாசல் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் போராடுவோம்'' என்றார் நவநீதகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x