

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் சங்கங்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தை உயர்த்த வகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் நேற்று வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:
1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் சங்கங்களின் பதிவுக் கட்டணங்கள் கடந்த 2011 அக்டோபரில் திருத்தி அமைக் கப்பட்டன. கடைசியாக கட்டணங் கள் மாற்றி அமைக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துவிட்டது.
தற்போது வசூலிக்கப்படும் கட்டணங்கள் பதிவுத் துறையின் சேவைகளுக்கு நிகராக இல்லை. எனவே, பதிவாளருக்கு செலுத்த வேண்டிய சங்கங்களின் பதிவுக் கட்டணத்தை திருத்தியமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் உள்ள இணைப்புப் பட்டியலை திருத்தம் செய்ய இந்த சட்ட முன்வடிவு வழிவகை செய்கிறது.
இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.