

தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களை பேரவைக்குள் கொண்டுவந்து காட்டியதால் திமுக உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்பட்டது.
சட்டப்பேரவையில் இது தொடர் பாக நேற்று நடந்த விவாதம்:
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்:
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டன. ஆனால், அப்பொருட்கள் தொடர்ந்து விற்கப் பட்டு வருகின்றன. சென்னையிலும் இப்பொருட்கள் பகிரங்கமாக விற்கப்படுகின்றன. இவ்வாறு கூறிய ஸ்டாலின், தன் கையில் இருந்த புகைப்படங்களை பேரவைத் தலைவரிடம் காட்ட முயன்றார்.
பேரவைத் தலைவர் பி.தனபால்:
இதுபற்றி முன்பே என்னிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி இல்லாமல் இப்படி செய்வதை அனுமதிக்க முடியாது.
அப்போது திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று, தங்கள் கையில் வைத்திருந்த குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை காட்டி னர். இதுபோன்று தடை செய்யப் பட்ட பொருட்களை காட்ட அனுமதியில்லை என்று பேரவைத் தலைவர் தெரிவித்தார். ஆனால், திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அப்பொருட்களை காட்டிக்கொண்டே இருந்தனர். இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார். பேரவைத் தலைவர் வழங்கவில்லை
முதல்வர் கே.பழனிசாமி:
தடை செய்யப்பட்ட பொருட்கள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது? மாண்புமிக்க இந்த பேரவையில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுவருவது சரியா? தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவதை கண்டுபிடித்தால் காவல்துறையினரிடம் தெரிவித்து, விற்பவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் தனபால்:
பேரவையில் அனுமதியின்றி இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வந்திருப்பது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது முறையல்ல. உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுப்பேன்.
அமைச்சர் டி.ஜெயக்குமார்:
தடை செய்யப்பட்ட பொருட்களை அவைக்குள் கொண்டுவந்துள்ளது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரவைத் தலைவர் தனபால்:
தடை செய்யப்பட்ட பொருட்களை அவையில் கொண்டுவந்தது அவையின் உரிமையை மீறிய செயல் என்பதால், இதை அவை உரிமைக் குழுவுக்கு அனுப்புகிறேன்.
அதைத் தொடர்ந்து, அவையை பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் நடத்தினார். அப்போது, மு.க.ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு வழங்கினார். ஆனால், அவர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது முதல்வர் கே.பழனி சாமி குறுக்கிட்டு, ‘‘பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால், இந்தப் பொருட்கள் விற்கப்படுவது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்து, சம்பந்தப்பட்டவர்களை பிடித்துக் கொடுத்திருக்கலாம். அதைவிடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை அவைக்குள் கொண்டுவருவது சரியல்ல’’ என்றார்.