சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுகமான குளியல்: மெரினா நீச்சல் குளத்தில் அலைமோதும் கூட்டம்

சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுகமான குளியல்: மெரினா நீச்சல் குளத்தில் அலைமோதும் கூட்டம்
Updated on
1 min read

நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரை யில் மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 100 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்ட இந்த குளத்தில் ஒரே நேரத்தில் 400 பேர் நீச்சலடித்து மகிழலாம். திங்கள்கிழமை மட்டும் விடுமுறை. மற்ற அனைத்து நாட்களும் திறந்திருக்கும். காலை 6 மணி முதல் மாலை 5.45 மணி வரை இயங்கி வரும் மெரினா நீச்சல் குளத்தில், காலை 9 மணி முதல் 10 மணி வரை மட்டும் பெண்கள் நீச்சலடிக்கலாம். மற்ற நேரங்களில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. 10 வயதுக்கு குறைந்தவர்கள் நீச்சல் அடிக்க அனுமதி இல்லை. ஒரு மணி நேரக் கட்டணமாக ரூ.15 வசூலிக் கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக சென்னை யில் வெயில் சுட்டெரிப்பதால் கோடம்பாக்கம், போரூர், தி.நகர் என சென்னையின் பல இடங்களில் இருந்தும் மெரினா நீச்சல் குளத்துக்கு வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித் துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஊழியர் ஒருவர் கூறியதாவது: மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்துக்கு வார நாட்களில் காலை முதல் மாலை வரையான 10 ஷிப்ட்களில் வழக்கமாக 250 பேர் மட்டுமே வருவார்கள். இந்த எண்ணிக்கை சனி, ஞாயிறுகளில் இரட்டிப்பாகும். தற்போது கோடை தொடங்கிவிட்டதால் வெயிலை சமாளிக்கவும் சுகமான குளியல் போடவும் வார நாட்களிலேயே 600-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். சனி, ஞாயிறுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்கு உயரும்.

பல பள்ளி, கல்லூரிகளுக்கு இன்னும் கோடை விடுமுறை விடப்படவில்லை. விடுமுறை விட்ட பிறகு, நீச்சல் குளத்துக்கு வருவோர் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in