Published : 20 Jul 2017 01:31 PM
Last Updated : 20 Jul 2017 01:31 PM

திமுக ஆதரவு மது ஆலைகளை மூட தயாரா?- ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி

திமுக ஆதரவு மது ஆலைகளை மூட ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பாக்குகள் சென்னையில் பல இடங்களில் விற்கப்படுவது பற்றி சட்டப்பேரவையில் புகைப்பட ஆதாரங்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் புகார் கூறியுள்ளார். கடைகளில் விற்கப்படும் போதைப்பாக்குகளையும் வாங்கி பேரவையில் காட்டியிருக்கிறார்.

தடை செய்யப்பட்ட குட்காவும் போதைப் பாக்குகளும் தமிழகத்தில் தடை செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. ஆனால், குட்கா விற்பனை தமிழகத்தில் பெயரளவில்தான் தடை செய்யப்பட்டதே தவிர, அவற்றின் விற்பனை ஒருநாள் கூட நிறுத்தப்படவில்லை.

செங்குன்றத்தில் குட்கா ஆலைகளில் வருமானவரித்துறை சோதனை நடத்திய போது கூட குட்கா விற்பனை தடைபடவில்லை. வழக்கத்தை விட சற்று அதிக விலைக்கு விற்கப்பட்டுக் கொண்டு தான் இருந்தது. கடந்த 4 ஆண்டுகளாகவே இந்த சட்டவிரோத குட்கா விற்பனைக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடித்தான் வந்திருக்கிறது. பல்வேறு பொதுக்கூட்ட மேடைகளில் குட்கா பொட்டலங்களை ராமதாஸ் காட்டி, அதன் விற்பனையை தமிழக அரசு தடுக்காதது ஏன்? என்று வினா எழுப்பியுள்ளார். ஆனால், அரசோ காவல்துறையோ குட்காவை ஒழிக்க முன்வரவில்லை.

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை பற்றி 4 ஆண்டுகளாக திமுக எந்த வினாவும் எழுப்பவில்லை. எனினும் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவாவது போதைப்பாக்கு விற்பனையை தடுக்காதது ஏன்? என்று போதைப்பாக்குகளை அவையில் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வினா எழுப்பியது வரவேற்கத்தக்கது.

ஆனால், அவரது புகாருக்கு பதிலளிக்க முடியாத முதல்வர், எதிர்க்கட்சியினர் மீது உரிமை மீறல் நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக மிரட்டல் விடுப்பது கண்டிக்கத்தக்கது. அரசு மீது எவர் புகார் கூறினாலும் அவர்களை மிரட்டுவதே பினாமி ஆட்சியாளர்களின் புதிய வழக்கமாகியுள்ளது.

குட்கா தடை செய்யப்பட்ட பொருள் என்பதால் அதன் விற்பனையை தடுக்கும்படி மு.க.ஸ்டாலின் வினா எழுப்பினாரா? அல்லது குட்கா உடல் நலனுக்கு எதிரானது என்பதால் அதற்கு எதிராக குரல் எழுப்பினாரா? என்றால் நிச்சயம் இரண்டாவது காரணத்திற்காகத் தான் குரல்

கொடுத்திருப்பார் என்று நம்பலாம். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் நண்பர் ஸ்டாலினுக்கு இன்னும் பெரிய கடமைகள் உள்ளன. சமூகக் கேடு மற்றும் உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துவதில் குட்கா விற்பனை எறும்பு என்றால் மது தயாரிப்பும், விற்பனையும் யானை ஆகும். இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது.

குட்கா ஆலைகளுக்கு எதிராகவும், விற்பனைக்கு எதிராகவும் போராடத் துணிந்த ஸ்டாலின், மது ஆலைகளுக்கு எதிராகவும், மது விற்பனைக்கு எதிராகவும் போராட முன்வர வேண்டும். பாமக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. சாலைகளை வகைமாற்றம் செய்து மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சிக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கடிதம் எழுதியபோது, அதையேற்று தமிழக அரசின் முயற்சியை கண்டித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டார்.

ஆனாலும், மதுவுக்கு எதிரானப் போர் இத்துடன் ஓய்ந்துவிடவில்லை. பாமக நடத்திய சட்ட மற்றும் அரசியல் போராட்டங்களின் பயனாக தமிழகத்தில் மொத்தமிருந்த 6815 மதுக்கடைகளில் 4825 மதுக்கடைகள், அதாவது 70% கடைகள் மூடப்பட்டு விட்டன. ஆனாலும் பினாமி ஆட்சியாளர்கள் மக்கள் போராட்டத்தையும் மதிக்காமல் மதுக்கடைகளை திறந்து வருகின்றனர். இதற்கு எதிராக பா.ம.க தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனாலும், எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கி விடும் என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. அதன்படி தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஏழு திமுக ஆதரவு மது ஆலைகளை மூடி விட்டால் தமிழகத்தின் ஒட்டுமொத்த மது விற்பனையில் 60 விழுக்காடு தடுக்கப்பட்டு விடும். இதனால் ஆண்டுக்கு 1.20 லட்சம் பேர் உயிரிழப்பதும் குறையும்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக இப்படி ஒரு கோரிக்கையை வைத்த போது, தேர்தலுக்குப் பிறகு அந்த மது ஆலைகள் மூடப்படும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். தேர்தல் முடிந்து ஓராண்டாகி விட்ட அந்த மது ஆலைகளை மூட இதுவே சரியான நேரம் என்று கருதுகிறேன். குட்கா தீமைக்கு எதிராக கொதிக்கும் ஸ்டாலினின் நெஞ்சம், மது தீமைக்கு எதிராகவும் கொதிக்கும் என்று நம்புகிறேன்.

எனவே, திமுக ஆதரவு மது ஆலைகள் ஏழையும் மூடும்படி அவர் ஆணையிட வேண்டும். ஒருவேளை அவற்றுக்கும் திமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று ஸ்டாலின் கூறுவாரேயானால், அவற்றை மூட வலியுறுத்தி பா.ம.க. தலைமையில் போராடத் தயாரா? என்பதை தெரிவிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x