சிறு விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த கூட்டுப் பண்ணை முறை ரூ.100 கோடியில் அறிமுகம்: தமிழக அரசு அறிவிப்பு

சிறு விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த கூட்டுப் பண்ணை முறை ரூ.100 கோடியில் அறிமுகம்: தமிழக அரசு அறிவிப்பு
Updated on
1 min read

சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.100 கோடியில் கூட்டுப் பண்ணை முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மொத்தம் 81 லட்சத்து 18 ஆயிரம் விவசாயிகளில் சுமார் 92 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள். இவர்கள் குறைந்த பரப்பளவில் சாகுபடி செய்வதால், தங்களுக்குத் தேவையான கடனுதவி பெற்று புதிய தொழில் நுட்பங்களை தங்களது நிலங்களில் முழுமையாகச் செயல்படுத்த முடியாமல் உள்ளனர்.

மேலும், விளைபொருட்கள் அளவும் குறைவாக இருப்பதால், மதிப்பைக் கூட்டி அதிகம் லாபம் பெறும் வகையில் சந்தைப்படுத்தவும் இயலாத நிலை உள்ளது. இதனால் இவர்களுக்குப் போதிய வருமானமும் கிடைப்பதில்லை.

இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 2017-18ம் ஆண்டில் 2 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில் ‘கூட்டுப் பண்ணை முறை’ என்ற முன்னோடித் திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசால் கொள்கை அளவில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக் கப்பட்ட இத்திட்டத்தை செயல் படுத்த தற்போது நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் அளித்து முதல்வர் உத்தரவிட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டுப் பண்ணை முறையில், சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் விவசாய ஆர்வலர் குழுக்கள் ஏற்படுத்தப்படும். ஒரே கிராமத்தில் தொகுப்பாக நிலம் உள்ள 20 சிறு, குறு விவசாயிகள் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு விவசாயியும் பங் கேற்புத் தொகையாக குறைந்த பட்சம் ரூ.500 செலுத்தி உறுப்பி னராகச் சேர்ந்துகொள்ள வேண்டும்.

இதுபோல அருகருகே உள்ள 5 விவசாய ஆர்வலர் குழுக்களை இணைத்து குறைந்தபட்சம் 100 சிறு, குறு விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்கப்படும். நடப்பு ஆண்டில் இதுபோல 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் வேளாண்மை தொடர்பான பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரூ.5 லட்சம் மூலதன நிதியாக தவணை முறையில் வழங்கப்படும். இதைக் கொண்டு தங்களது தேவைக்கேற்ப நுண்ணீர்ப் பாசன அமைப்பு, நீர் எடுத்துச் செல்லும் குழாய்கள், பொதுப் பயன்பாட்டுக்கான டிராக்டர், பவர் டில்லர் உள்ளிட்ட தேர்வுசெய்யப்பட்ட பணிகளுக்காக செலவிடலாம்.

2017-18ல் இத்திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.100 கோடி வழங்கும். இதன்மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் செயல்பாடுகள் செம்மைப்படுத்தப் படும். ஆண்டுதோறும் அதிக அளவில் குழுக்கள் அமைக்கப் பட்டு, அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in