தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வண்ணம் வரிச் சுமையை குறைத்து அரசாணை பிறப்பித்திடுக: ஓபிஎஸ்

தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வண்ணம் வரிச் சுமையை குறைத்து அரசாணை பிறப்பித்திடுக: ஓபிஎஸ்
Updated on
2 min read

தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வண்ணம் வரிச் சுமையை குறைத்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக திரையரங்குகள் இயங்காமல் இருக்கின்றன. திரைப்படக் காட்சிகள் நடைபெறவில்லை. அதிகமான வரிச்சுமையால் திரையரங்குகளை நடத்த முடியாத சூழ்நிலை என்று கூறி, திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளை முடிவிட்டு, போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசு கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி என்ற சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியது. இதுவரை நாடு முழுவதும் கலால் வரி, சுங்க வரி, கேளிக்கை வரி போன்று 10-க்கும் மேற்பட்ட வரிகள் தனித்தனியாக விதிக்கப்பட்டிருந்தன.

மாநிலத்துக்கு மாநிலம் வரி விகிதங்கள் மாறுபட்டும் இருந்தன. அதனால் ஏற்பட்ட குழப்பங்களை நீக்கி, இதுவரை விதிக்கப்பட்டிருந்த அத்தனை வரிகளையும் ஒன்றாக்கி, ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கையோடு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

பல மாநிலங்கள், அங்குள்ள திரையரங்குகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த மாநில அரசின் வரி மற்றும் உள்ளாட்சி வரிகளை ரத்து செய்து விட்டு, சரக்கு மற்றும் சேவை வரி மூலம் 28 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவித்தன. ஆனால், தமிழகத்தில் அதைப் போன்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

மாநில அரசின் வரி, உள்ளாட்சி வரிகளை தமிழக அரசு ரத்து செய்யவில்லை. அதனால் ஜிஎஸ்டி மூலம் ஒரே வரியாக 28 சதவீதம் செலுத்துவதற்குப் பதில், மாநில அரசின் வரி மற்றும் உள்ளாட்சி வரிகளையும் சேர்த்து 64 சதவீத வரி செலுத்த வேண்டியதாக இருக்கிறது. அவ்வளவு வரி செலுத்தி திரையரங்குகளை நஷ்டத்தில் இயக்க முடியாது. எனவே மற்ற மாநிலங்களைப் போல சரக்கு மற்றும் சேவை வரி மட்டும் வசூலிக்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு திரையரங்கு உரிமையாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

திரைப்படத்துறைக்கு பிரச்சினை வந்த போதெல்லாம், அதை கருணை உள்ளத்தோடு பரிசீலித்து, தீர்த்து வைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஒருமுறை சம்பளப் பிரச்சினையால் திரைப்படத் தொழில் முடக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்த போது, அந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பல உதவிகளைச் செய்ததோடு, பட முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து வைத்து, அவர்களை வாழ வைத்தவர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் வழியில் நடப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த அரசு, அவரைப் போல திரையுலகப் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு. திரைப்படங்களும், திரையரங்குகளும் வெறும் பொழுது போக்கு சாதனங்கள் மட்டும் அல்ல. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையும் அதில் அடங்கியிருக்கிறது.

வரி உயர்வுக்கு தீர்வு காணவில்லை என்றால், சினிமா கட்டணம் உயர்த்தப்பட்டு அதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலைதான் உருவாகும். எனவே தமிழக அரசு, திரைப்படத்துறையினர், குறிப்பாக தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வண்ணம் வரிச் சுமையை குறைத்து, அதன் மூலம் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு ஆணை பிறப்பித்து, திரைப்படத் தொழிலை காப்பாற்ற வேண்டும்'' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in