

கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு கொடுப்பதற்காக கோட்டைக்கு வந்த ஓய்வுபெற்ற போலீஸார், அவர்களது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் போலீஸார் உள்ளனர். காவலர் சங்கம், 8 மணி நேர வேலை, சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை போலீஸார் நீண்ட நாட்களாக முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், ‘தமிழ்நாடு காவல் துறையின் பரிதாபங்கள்’ என்ற தலைப்பில் 8 அம்ச கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் கடந்த 22-ம் தேதி ஒட்டப்பட்டிருந்தது. இது போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்கும் நாளில், ஓய்வுபெற்ற போலீஸாரும் அவர் களின் குடும்பத்தினரும் கோட் டையை முற்றுகையிட உள் ளனர், இதில் பணியில் இருக் கும் போலீஸாரும் கலந்து கொள்வார்கள் என்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
இந்நிலையில், சட்டப்பேரவை யில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று தொடங்கியது. எனவே, போலீஸாரின் குடும்பத் தினர் கோட்டைக்கு வரக்கூடும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோட் டைக்கு செல்லும் அனைத்து நுழை வாயில்களிலும் சட்டம் - ஒழுங்கு காவலர்களுக்கு மாற்றாக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
காலை 10 மணியளவில் ஓய்வுபெற்ற போலீஸார் 5 பேர், மனு கொடுப்பதற்காக கோட்டைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து திரும்பிச் செல்லும்படி கூறினர். அவர்கள் திரும்பிச் செல்ல மறுத்த தால் 5 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர்கள் மனோகரன், வேலுச்சாமி, தேவ கண்ணன் ஆகியோர், ‘‘நாங்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவா சனின் உறவினர்கள். அவரை பார்த்து மனு கொடுத்துவிட்டு வருகிறோம்’’ என்று கூறி உள்ளே செல்ல முயன்றனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
கோட்டைக்கு எதிரே வாக னங்கள் நிறுத்தும் இடத்தில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் செல்வஅழகன் தலைமையில் ஓய்வுபெற்ற போலீஸார், அவர் களின் குடும்பத்தினர் சுமார் 40 பேர் ஒன்றுகூடி திடீர் போராட்டம் நடத்தினர். இணை ஆணையர் சுதாகர் தலைமையில் வந்த போலீஸார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது நிருபர்களிடம் செல்வஅழகன் கூறும்போது, ‘‘போலீஸாருக்கு 8 மணி நேர வேலை, உரிய பதவி உயர்வு, வார விடுமுறை, கருணை அடிப் படையில் வேலை அளிக்க வேண் டும். போலீஸாரின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்’’ என்றார்.
முதல்வரை சந்திப்பதற்கு அனுமதி மறுத்த போலீஸார், கோரிக்கை மனுவை தாங்களே வாங்கிக் கொண்டனர். பின்னர், செல்வஅழகன் உட்பட 40 பேரை யும் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர். கைதான அனைவரும் பாரிமுனை, அண்ணா சதுக்கம் காவல் நிலைய பகுதி களில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களின் முழு விவரங்களை சேகரித்த போலீஸார், மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.
பெண் போலீஸார்
போராட்டத்தில் தற்போது பணியில் இருப்பவர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், நேற்று நடந்த போராட்டத்தில் பணியில் இருக்கும் 3 பெண் போலீஸார் கலந்துகொண்டனர். அவர்களை அடையாளம் கண்டுபிடித்த போலீஸார், தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர், பர்தா அணிந்து கோட்டைக்குள் நுழைய முயன்றனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.