

உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட காலத்தில் நடத்த உரிய காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரி மாநிலத் தேர்தல் ஆணையம் மீது திமுக மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ததுடன், டிசம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையே, தேர்தல் ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரியில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மே 14-ம் தேதிக்குள் கண்டிப்பாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால், தனி நீதிபதி விதித்த நிபந்தனைகளை முறையாகக் கடைபிடித்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய வாக்காளர் பட்டியலை ஆன்லைன் மூலமாக சரிபார்க்க வேண்டி இருப்பதால், ஜூலைக்குள் தேர்தலை நடத்தி விடுவதாக உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது.
திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அரசு வழக்கறிஞர் நெடுஞ்செழியன் மற்றும் தமிழக அரசு சார்பில் திவாகர் ஆகியோர் ஆஜராகினர்.
திமுக சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
''இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மே 14-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அந்த உத்தரவை தேர்தல் ஆணையம் அமல்படுத்தவில்லை.
தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்ற முடிவில் இருக்கின்றன. அதனால் தேர்லை குறிப்பிட்ட காலத்தில் நடத்த உரிய காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரி மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம், ''கடந்த ஆண்டு அக்டோபரிலேயே சுமார் ரூ.125 கோடி செலவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் திமுக தொடர்ந்த வழக்காலேயே தேர்தல் ரத்தானது.
தற்போது தேர்தல் தொடர்பாக வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதனால்தான் தேர்தலை நடத்த முடியவில்லை'' என்றது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் 4 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.