Published : 09 Jul 2017 10:05 AM
Last Updated : 09 Jul 2017 10:05 AM

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எண்ணம் மக்களுக்கு இயல்பாக வரவேண்டும்: தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி பி.ஜோதிமணி வலியுறுத்தல்

நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எண்ணம் மக்கள் மனதில் இயல்பாகவே வரவேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதி மணி தெரிவித்துள்ளார்.

இயற்கை மற்றும் காட்டுயிர் தொடர் பான ‘காடு’ இதழ், எம்ஜிஆர் - ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரி சார்பில் ‘இயற்கையோடு நாம்’ என்ற 2 நாள் விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. விழாவை தொடங்கி வைத்து நீதிபதி பி.ஜோதிமணி பேசிய தாவது:

உலக வெப்பமயமாதலுக்கு அடிப்படை காரணம், இயற்கைக்கு எதிராக மனிதன் செய்த வினைகள்தான். அதனால்தான் தமிழகத்தில் வெயில் காலத்தில் மழை யும், மழை காலத்தில் வெயிலும் அடிக்கிறது. அனைத்தும் பருவம் தவறி நடக் கிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும், நேசிக்கும் எண்ணம் மக்களுக்கு இயல்பாக இல்லை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால், அதன் எதிர்வினை பயங்கரமாக இருக்கும் என்ற பயத்தாலேயே தற்போது அதை பாதுகாக்க நினைக்கிறான். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எண்ணம் மக்களுக்கு இயல்பாக வரவேண்டும். இயற்கையின் முன்பு நாம் சாதாரணமானவர்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். நீர்நிலைகளை அரசுதான் தூர் வார வேண்டும் என நினைக்காமல், பொதுமக்களே அதில் ஈடுபட வேண்டும்.

மரக்கன்று வளர்ப்பில் பள்ளிக் குழந்தைகளையும் ஈடுபடுத்த வேண்டும். விதைகள் மரமாவதை குழந்தைகள் பார்க்க வேண்டும். மரங்களும் நம்மைப் போன்ற உயிர்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அப்போதுதான், அவர்கள் பெரியவர்களாக வரும்போது, மரங்களை வெட்ட மாட்டார்கள்.

உலக நாடுகளில் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டுமே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் போன்ற அதிகாரம் பெற்ற, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டால் தண்டனை அளிக்கும் அமைப்பாக தேசிய பசுமை தீர்ப்பாயமும் உள்ளது. இதுபோன்ற அமைப்பு வேறு எந்த நாட்டிலும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ‘தி இந்து’ (தமிழ்) ஆசிரியர் கே.அசோகன், நியூஸ் 18 (தமிழ்நாடு) தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தலைமை அதிகாரி பாரதி தம்பி, எம்ஜிஆர் - ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் அபிதா சபாபதி, ‘காடு’ இதழின் பதிப்பாசிரியர் பா.அமுதரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு விளக்க அமர்வுகளும் விழாவில் இடம் பெற்றன.

மூலிகைச் செடிகள், பாரம்பரிய உணவு வகைகள், மண் பாண்டங்கள் உள்ளிட்டவை விழா அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த விழா, இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி மாலை வரை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x