Last Updated : 21 Nov, 2014 06:17 PM

 

Published : 21 Nov 2014 06:17 PM
Last Updated : 21 Nov 2014 06:17 PM

சொந்த ஊரில் 5 மீனவர்களுக்கு நெகிழ்ச்சிமிகு வரவேற்பு

இலங்கை உயர் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் தங்கச்சிமடத்தில் நெகிழ்ச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மீனவர்கள் அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாந்த், லாங்லெட் ஆகிய 5 பேரும் டெல்லி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து சேர்ந்தனர்.

பின்னர், சென்னையில் இருந்து தமிழக அரசு சார்பில் தனி வாகனத்தில் மீனவர்களின் சொந்த ஊரான தங்கச்சிமடத்திற்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சுந்தர்ராஜ் ஆகியோர் தங்கச்சிமடத்திற்கு அழைத்து வந்தனர்.

தனது மனைவி, குழந்தைகளுடன் மீனவர் பிரசாத்.

தாயகம் திரும்பிய மீனவர்களுக்கு பாம்பன் பாலத்திலிருந்து தங்கச்சிமடம் குழந்தை ஏசு தேவாலயம் வரையிலும் மீனவ சமுதாய மக்கள் சாலைகளின் இருபுறமும் நின்று வரவேற்றனர். வழிநெடுகிலும் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.

மதியம் 1 மணியளவில் 5 மீனவர்களும் தேவாலயத்திற்குள் நுழைந்ததும் மீனவர்கள் 5 பேரையும் மேள தாளங்கள் முழங்க, இனிப்புகள் வழங்கி உற்சாச வரவேற்பு அளிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து 5 பேரையும் மீனவர்களின் குடும்பத்தினர் கண்டதும் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர்.

நெகிழ்ச்சியுடன் நன்றி...

தங்கச்சிமடம் குழந்தை ஏசு தேவாலயத்தில் 5 மீனவர்களுக்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் விடுதலையான மீனவர்கள் சார்பில் வில்சன் பேசும்போது, "போதைப் பொருள் கடத்தியதாக நாங்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டவுடன் நாங்கள் 5 பேரும் அப்பாவிகள் என உணர்ந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா எங்கள் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரமும், குழந்தைகளின் படிப்பிற்காக பண உதவி செய்தார்கள். இலங்கை நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பிலும் நடத்தினார். அவருக்கு முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தூக்குத் தண்டனையிலிருந்து மீட்ட பிரதமர் நரேந்திர மோடி, விடுவித்த இலங்கை அதிபர் ராஜபச்சே, எங்கள் வழக்கிற்காக இலங்கை சிறைக்கும் தங்கச்சிமடத்திற்காகவும் அலைந்து திரிந்த அருளானந்தம், கொழும்பு சிறையில் வந்து எங்களைப் பார்த்த பாம்பன் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டவர்களுக்கும், எங்களுக்காக தொடர்ந்து போராடிய அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீனவ மற்றும் தமிழ் சமுதாயத்திற்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயபால், சுந்தர்ராஜ், அன்வர்ராஜா எம்.பி மற்றும் அனைத்து கட்சிப் பிரமுகர்களும், மீனவப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

விடுதலையான மீனவர் அகஸ்டஸ் தனது மகளுடன்.

"குற்றத்தை ஒப்புக்கொள்ள துன்புறுத்தினர்"

விடுதலையான மீனவர் பிரசாத் கூறும்போது, "எங்கள் 5 பேரையும் சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர் எங்கள் கை, கால்களை கட்டி வாயில் துணியை திணித்து இரவு முழுவதும் அடித்து போதைப் பொருள் கடத்தியதாக ஒப்புக் கொள்ளுமாறு துன்புறுத்தினர்.

மறுநாள் ஊர்காவல்துறையினரிடம் கஞ்சா கடத்தியதாகக் கூறி ஒப்படைத்தனர். சிறையில் மூன்றாண்டுகளில் முறையான உணவும் கிடையாது.

தூக்கு தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் 30.10.2014 அன்று தீர்ப்பளித்து. எங்களுடன் குற்றம்சாட்டப்பட்ட மூன்று யாழ்ப்பாண மீனவர்களில் ஒருவர் இந்த ஐந்து மீனவர்களை நாங்கள் ஒருபோதும் பார்த்தது கிடையாது என்று கூறினார். ஆனால் நீதிமன்றம் அதனை எல்லாம் பொருட்படுத்தவில்லை.

தூக்குத்தண்டனையை அறிவித்த பின்னர் இனி எப்போதும் எங்கள் குழந்தைகள், மனைவி, தாய், தந்தையர்களை பார்க்க முடியாது என்று தான் தோன்றியது. இன்று மறுவாழ்வினை தமிழக அரசும், மத்திய அரசும் தந்துள்ளது" என்றார்.

தமிழக அரசு நிதி உதவி

புதிய வாழ்க்கையை 5 மீனவர்களும் தொடங்க 5 மீனவர்களுக்கும் தலா ரூ.3 லட்சம் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதனை மீனவர்களிடமும் அமைச்சர்கள் வளர்மதி, ஜெயபால், சுந்தர்ராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.

24 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

இதனிடையே, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 24 பேரின் காவலை ஊர்காவல் நீதிமன்றம் 4வது முறையாக டிசம்பர் 5ம் தேதி வரையிலும் நீட்டித்து உத்திரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x