

ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பா ளரும், தி.க. தலைவருமான கி.வீரமணி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இந்திய முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, திராவிட இயக்கத் தமிழர்பேரவை தலைவர் சுபவீ, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ ஜி.பீமாராவ், பொதுப்பள்ளிக் கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு கி.வீரமணி கூறியதாவது: ‘நீட்’ நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற்றத்தர வேண்டியது தமிழக அரசின் கடமை. நீட் தேர்வு, இடஒதுக்கீட்டை அறவே பறிக்கக்கூடிய முயற்சி.
மாநில அரசின் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும். சமூகநீதி காக்கப் பட வேண்டும். இதற்கெல்லாம் எதிரான ‘நீட்’ தேர்வைக் கண்டித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி ஜூலை 12-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
‘நீட்’ தேர்வு விஷயத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. பொதுப்பட்டியலுக்கு கொண்டுசெல்லப்பட்ட கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது ஒன்றுதான் கல்வி சம்பந்தப் பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு. அதற்கான முயற்சியிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு கி.வீரமணி கூறினார்.