

கடந்த காங்கிரஸ் அரசு உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தை செயல்படுத்தியது. அந்த திட்டத்தின் மூலம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டரை முழு விலை அளித்து நுகர்வோர் வாங்கவேண்டும். சிலிண்டருக்கான மானியத்தை பெற, ஆதார் அட்டை நகலையும், வங்கி கணக்கு எண்ணை காஸ் ஏஜென்சியில் கொடுக்க வேண்டும். மானியத்தொகை வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் முதல் பரிசோதனை அடிப்படையில் புதுச்சேரியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டப்பட்டி சிலிண்டருக்கு ஆயிரம் ரூபாய் வரை பொதுமக்கள் தந்து விட்டு, சிறிது நாட்களுக்கு பிறகு வங்கி கணக்கில் மானியம் வருவதை காத்து கிடந்து பெற வேண்டியிருந்தது. மேலும் மானியத்தொகை வங்கி கணக்கில் சேருவதில் பிரச்சினைகள் எழுந்தன. இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்ததால் இந்த திட்டம் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு கைவிடப்பட்டது.
இந்நிலையில் அடுத்து பொறுப்பேற்ற பாஜக அரசு மீண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. முதல் கட்டமாக புதுச்சேரி உட்பட 53 மாவட்டங்களில் வரும் 15ம் தேதி முதல் அமல்படுத்த போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று காஸ் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் இதுதொடர்பான தகவல்கள் வந்தன.
வங்கிகள் மூலம் ஏற்கெனவே காஸ் மானியம் பெற்றவர்களுக்கு வந்த எஸ்எம்எஸ் தகவலில், வங்கி கணக்கு மூலம் மானியம் பெற்றுள்ளதால் புதிதாக பதிவு செய்ய வேண்டியதில்லை. உங்கள் நிலைப்பற்றி www.mylpg.in என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
காஸ் ஏஜென்சி தரப்பில் விசாரித்தபோது, வங்கி மூலம் ஏற்கெனே மானியம் பெறாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்தால் தான் மானியம் கிடைக்கும் என குறிப்பிட்டனர்.