Published : 28 Nov 2014 11:20 AM
Last Updated : 28 Nov 2014 11:20 AM

பெரியாறு அணைப் பகுதியில் தமிழக அதிகாரிகளை தடுத்த கேரள வனத் துறையினர்: 5 மணி நேரம் காத்திருந்தனர்

பெரியாறு அணைக்கு நேற்று செல்ல முயன்ற தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை, தேக்கடி படகுத் துறையில் கேரள வனத் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதையடுத்து அடுத்த கட்டப் பணிகளில் தமிழக பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, பெரியாறு அணை அருகேயுள்ள பேபி அணைப் பகுதியில், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக வல்லக்கடவு வனப் பகுதி வழியாக நேற்று முன்தினம் தமிழக பொதுப்பணித் துறையினர் லாரியில் மணல் கொண்டு சென்றபோது, கேரள வனத் துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், பல மணி நேரத்துக்குப் பிறகு அனுமதி வழங்கினர்.

இந்நிலையில், நேற்று காலை பெரியாறு அணைக்கு செல்ல முயன்ற பெரியாறு அணை கோட்ட உதவிச் செயற்பொறியாளர் சவுந்தரம், உதவிச் செயற் பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோரை தேக்கடி ரேஞ்சர் சஞ்சீவ் தலைமையிலான வனத் துறையினர் அனுமதிக்க மறுத்து, படகுத் துறையில் உள்ள கேட்டையும் பூட்டிவிட்டனர்.

இதுகுறித்து ‘தி இந்து’-விடம் பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘உதவிச் செயற்பொறியாளர் சவுந்தரம் மூவர் குழுவால் அமைக்கப்பட்டுள்ள துணைக் குழுவில் தமிழகப் பிரதிநிதியாக உள்ளார்.

தமிழக பொதுப்பணித் துறையின் அலுவலகம் அணைப் பகுதியில் உள்ளது. தினமும் தமிழக படகு மூலம் அலுவலகத்துக்குச் செல்வது வழக்கம்.

ஆனால், நேற்று வேண்டுமென்றே பெரியார் புலிகள் காப்பக சரணாலயத்தின் துணை இயக்குநர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில், தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதுகுறித்து தமிழக பொதுப் பணித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் கேரள வனத் துறையினரிடம் பேசியதையடுத்து 5 மணி நேரத்துக்குப் பிறகு அணைக்குச் செல்ல அனுமதி வழங்கி படகுத் துறை கேட்டை திறந்துவிட்டனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x