

உயிரைப் பறிக்கும் கல்லீரல் நோய்களில் இருந்து மக்களைக் காக்க வேண்டுமானால், தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்துவது தான் ஒரே வழியாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனித உயிர்களைப் பறிக்கும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய் (liver cirrhosis) தமிழகத்தில் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்திருக்கிறது. கல்லீரல் நோய் தாக்குவதற்குக் காரணம் அளவுக்கு அதிகமான மதுப் பழக்கம் தான் என்பது அதிர்ச்சி அளிக்கும் உண்மையாகும்.
தமிழ்நாட்டில் கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய் கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நோய் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதுடன், இதற்கு சிகிச்சையே கிடையாது என்பதில் இருந்தே இந்த நோய் எந்த அளவுக்கு கொடுமையானது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
தொடர்ந்து மது அருந்தும் போது கல்லீரலில் காயம் ஏற்பட்டு, அதன் ஆரோக்கியமான திசுக்கள் சேதமடையும். இதனால், கல்லீரல் வழியான இரத்த ஓட்டம் தடைபடுகிறது. கல்லீரல் நோய் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாது என்பது வேதனையளிக்கும் இன்னொரு உண்மையாகும். கல்லீரல் 80% சேதமடையும் வரை இந்த நோய்க்கான எந்த அறிகுறியும் தென்படாது. நோயின் அறிகுறிகள் தென்படத் தொடங்கும் போது, அது குணப்படுத்த முடியாத நிலையை எட்டியிருக்கும். அத்தகைய தருணத்தில் கல்லீரலை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. ஒருவேளை பல லட்சம் ரூபாய் செலவிட்டு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தால் கூட அது 100% வெற்றியடையும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
உடல் பருமனால் கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய் ஏற்படலாம் என்ற போதிலும் அளவுக்கு அதிகமான மதுப் பழக்கம் தான் இந்த நோய்க்கு முதன்மையான காரணமாக உள்ளது. இத்தகவலை உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்திருக்கிறது. மது குடிப்பதால் 60 வகை நோய்கள் தாக்கும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இப்போது கல்லீரல் இழைநார் வளர்ச்சி, சிலவகை புற்றுநோய்கள் உட்பட 200 வகையான நோய்கள் தாக்கும் என்று கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட உலக சுகாதார நிறுவன அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ இதைப் பற்றிய அக்கறையோ, கவலையோ இல்லாமல் மது அருந்தும் பழக்கத்தை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது.
மது விற்பனையால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.22,000 கோடி வரை வருவாய் கிடைப்பது உண்மை தான். ஆனால், மதுப்பழக்கத்தால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்படும் இழப்பு இதைவிட பல மடங்கு அதிகம் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். மதுவால் மக்களுக்கு ஏற்படும் கல்லீரல் நோய் போன்ற உடல் நல பாதிப்புகளை சரி செய்வதற்காக ஆகும் மருத்துவ செலவுகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் எனது நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை உறுதி செய்கின்றன. கல்லீரல் வளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டோரை காப்பாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரேவழி என்பதும், அதுவும் முழுமையாக வெற்றி பெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதும் ஒருபுறமிருக்க, அரசு மதுக்கடைகளில் குடிக்கும் அடித்தட்டு மக்களில் எத்தனை பேருக்கு இச்சிகிச்சையை செய்து கொள்ளும் அளவுக்கு பொருளாதார வசதி இருக்கும்? என்பதும் கவலையளிக்கும் வினா ஆகும்.
குடிப்பழக்கத்தால் தேசிய அளவில் ஆண்டுக்கு 18 லட்சம் பேரும், தமிழகத்தில் 2 லட்சம் பேரும் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உயிரைப் பறிக்கும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய் வேகமாக தாக்கத் தொடங்கினால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இது தொடர்பாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வல்லுனர்கள் சிலரிடம் நான் ஆலோசனை நடத்தியபோது கல்லீரல் நோயால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டுமானால் மதுவை ஒழிப்பது தான் சிறந்த வழி என்று தெரிவித்தனர். அரசின் வருவாய்க்காக ஆண்டுக்கு 2 லட்சம் அப்பாவி மக்கள் உயிரிழக்கத்தான் வேண்டுமா? என்ற வினாவுக்கு விடை காண வேண்டிய தருணம் வந்து விட்டது.
மதுவின் தீமைகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டுமானால், தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்துவது தான் ஒரே வழியாகும். எனவே தமிழகத்திலுள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும். அத்துடன் குடிநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதியும், மனநல ஆலோசனையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.