Published : 10 Jul 2017 02:54 PM
Last Updated : 10 Jul 2017 02:54 PM

ஆசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம்; ஆரோக்கிய ராஜிவுக்கு ரூ.15 லட்சம் பரிசு: முதல்வர் அறிவிப்பு

ஆசிய தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணனுக்கு ரூ.20 லட்சம், ஆரோக்கிய ராஜிவுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

''விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடும் உயரிய நோக்கில், சர்வதேச தரத்தில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைத்தல், கிராம விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்தல், சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கம் பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த வீரர் லட்சுமணன் 2017ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் கலந்துகொண்டு 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜிவ் என்பவரும் இப்போட்டியில் கலந்துகொண்டு 4 * 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

லட்சுமணன் மற்றும் ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் இப்போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்ததற்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், இவர்கள் பல்வேறு பன்னாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு மேன்மேலும் பதக்கங்களை வெல்ல எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த தடகள வீரர் லட்சுமணனுக்கு ரூபாய் 20 லட்சமும், தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த தடகளவீரர் ஆரோக்கிய ராஜிவுக்கு ரூபாய் 15 லட்சம் வழங்கப்படும்'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x