

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான வரும் 27-ம் தேதி, ராமேசுவரம் பேக்கரும்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி மரணமடைந்தார். கலாமின் உடல் அவரது பிறந்த ஊரான ராமேசுவரத்துக்கு அருகே உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பேக்கரும்பில் மணிமண்டபம் கட்டப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஓ) சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த பணிகள் இம்மாதம் 3-வது வாரத்துக்குள் முடிக்கப்பட்டு, கலா மின் 2-ம் ஆண்டு நினைவு நாளான வரும் 27-ம் தேதி மணிமண்டபம் திறக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பார் என கூறப்படுகிறது. அதற்கேற்ப, மணிமண்டப பகு தியை பாதுகாப்புப் படை அதிகாரி கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இதனிடையே, ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமையில் மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.