Published : 01 Jul 2017 09:30 AM
Last Updated : 01 Jul 2017 09:30 AM

தருமபுரியில் கூடுதல் போதைக்காக ரசாயனம் கலந்து மது அருந்திய 3 இளைஞர்கள் பலி

தருமபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியில் கூடுதல் போதைக்காக மதுவில் வேதிப்பொருள் கலந்து குடித்த 3 இளைஞர்கள் உயிரிழந் தனர். ஒருவர் ஆபத்தான நிலை யில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தருமபுரி மாவட்டம் பென்னா கரம் வட்டம் ஏரியூரை அடுத்த ஏர்கோல்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் பச்சியப்பன் (28). பி.எஸ்ஸி., வேதியியல் பட்டதாரியான இவர் சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் பொட்டனேரி பகுதியில் செயல்படும் தனியார் ஸ்டீல் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இவர், தன் நண்பர்களான ஏரியூர் விஜய் (23), உத்திரகுமார் (24), பழனிசாமி (25) ஆகியோருடன் சேர்ந்து கடந்த 28-ம் தேதி மாலை ஏரியூர் அடுத்த ஒதுக்குப்புறமான பகுதியில் மது அருந்தியுள்ளார். மது அருந்திவிட்டு வீடு திரும்பிய இவர்கள் 4 பேரும் வழக்கத்துக்கு மாறாக வாந்தியெடுத்ததுடன், இரவு முழுவதும் வயிறு மற்றும் நெஞ்செரிச்சலுக்கு உள்ளாகி துடித்தனர்.

மேலும் ஒருவருக்கு சிகிச்சை

இதில், பச்சியப்பன் மறுநாள் அதிகாலை உயிரிழந்தார். மற்ற 3 பேரையும் அவர்களின் உறவினர் கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி விஜய், உத்திரகுமார் ஆகிய இருவரும் நேற்று மதியம் இறந்தனர். பழனிசாமிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி ஏரியூர் காவல் ஆய்வாளர் ஜாபர் உசேனிடம் கேட்டபோது, ‘‘இளைஞர்கள் 4 பேரும் அதிக போதைக்கு விருப்பப்பட்டு திரவ வடிவிலான வேதிப்பொருள் ஒன்றை மதுவில் கலந்து குடித்ததால் உயிரிழப்பு நடந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர் விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கங்காதரிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘விஷ சாராயம் என்றால் இவர்களைப் போல இன்னும் பலர் பாதிப்படைந் திருப்பார்கள். நண்பர்கள் குழுவி னர் 4 பேர் மட்டும் கூடுதல் போதையை விரும்பி ஏதோ வேதிப்பொருளை மதுவில் கலந்து குடித்ததாகத் தெரிகிறது. மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆய்வக பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே இதுகுறித்த கூடுதல் தகவல்கள் தெரிய வரும். மற்றபடி விஷ சாராய விற்பனை இருப்பதாகக் கூறப்படுவது தவறான தகவல்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x