

இறைச்சிக்காக பசு, காளை, எருமை, ஒட்டகங்களை விற்கவும், கொல்வதற்கும் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் பசுக்கள், காளை கள், கிடாரிகள், கன்றுகள், எருமைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் விற்கவும், வாங்கவும் மத்திய அரசு 23.5.2017-ல் தடை விதித்தது. இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதம் என அறிவிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் செல்வகோமதி, ஆசிக் இலாகிபாபா ஆகியோர் தனித்தனியாக பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு முந்தைய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆஜராகி வாதாடினார். இதனால், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட மனு தாரரின் வழக்கறிஞர்கள், மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை நீட் டிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை ஜூலை 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.