Published : 23 Nov 2014 10:02 AM
Last Updated : 23 Nov 2014 10:02 AM

சுமங்கலி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: உழைக்கும் பெண்கள் மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாடு மாநில உழைக்கும் பெண்கள் அமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமங்கலி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அனைத்து உழைக்கும் பெண்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து தமிழ்நாடு மாநில உழைக்கும் பெண்கள் அமைப்பின் அமைப்பாளர் வஹிதா நிஜாம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் இளம் பெண்களை மூன்று ஆண்டுகளுக்கு கம்பெனிகளில் பாதுகாப்பற்ற சூழலில் தங்க வைத்து, கொத்தடிமைகளாக நடத்துகிறார்கள். சமீபத்தில் ஈரோட்டில் ஒரு நிறுவனத்தில் ஒரு பெண்ணை மேற்பார்வையாளர் அடித்ததால் அவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து விசாரித்தபோது சத்தீஸ்கரை சேர்ந்த 100 பெண்களை அங்கிருந்து மீட்க முடிந்தது. ஆனால், மீட்கப்பட்ட பெண்களை வீட்டுக்கு அனுப்பாமல், வேறு வேலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுமங்கலி திட்டத்தை எதிர்த்து, வரும் ஜனவரி மாதம் முதல் மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, “தொழிற்சாலைகள் சட்டம் (1948) பெண்கள் இரவில் பணி புரிய தடை விதித்துள்ளது. மென்பொருள் துறை உள்ளிட்ட பல துறைகளில் இரவில் பணிபுரியும் பெண்கள் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், பெண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பெண்கள் இரவு பணிகளை மேற்கொள்ளலாம் என்று இந்த சட்டத்தை திருத்தப்போவதாக கூறப்படுகிறது. இது பெண்கள் மீதான சுரண்டலை அதிகப்படுத்தும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் கல்வியாளர் வசந்திதேவி, சி.ஐ.டி.யு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, ஏஐடியுசி துணைப் பொதுச்செயலாளர் கே.ரவி, மாநிலத் தலைவர் கே.சுப்பராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x